தன்னை கிண்டலடிப்பவர்களுக்கு தோனி விளம்பரத்தின் மூலம் கூறும் மெசேஜ் ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 29ஆம் தேதி தொடங்குகின்றன. கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் திருவிழாவாக அமையும் ஐபிஎல் தொடர், தோனி ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாடமாக அமையவுள்ளது. ஏனென்றால் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி நேராக ஐபிஎல் போட்டியில் மட்டுமே களமிறங்குகிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் ‘மரண வைட்டிங்’கில் உள்ளனர்.
அதேசமயம் தோனி ஹேட்டர்கள் அவரை கிண்டல் செய்ய தவறவில்லை. வயதாகிவிட்டது, ஃபார்மில் இல்லை, அதிரடியாக பேட்டிங் செய்யமாட்டார் என பல்வேறு விமர்சனங்களை தோனி மீது வைத்துக்கொண்டே இருக்கின்றனர். அத்துடன் பல மீம்ஸ்களை தோனிக்கு எதிராக பதிவு செய்கின்றனர். இதற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் தற்போது ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரம் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், விமானத்தில் பயணிக்கும் ஒரு ஜோடி மீம்ஸ் பத்தி பேசிக்கொள்கின்றனர். அப்போது அந்தப் பெண்ணிடம் அந்த நபர் தன்னுடைய மீம்ஸை பார்க்குமாறு கூறுகிறார். அந்தப் பெண்ணும் அந்த நபரின் போனில் வரும் வீடியோவை பார்க்க, அந்த வீடியோவில் ஒரு இளைஞர், “மனசுல தங்கம்.. மைதானத்துல சிங்கம்.. சீறி பாய்ந்து வருவாரா நம்ம தல.!” என பேசுகிறார். அத்துடன் ‘சும்மா உளறுரான்.. ஜான்சே இல்ல’ என அந்த நபர் கூற இருவரும் சிரிக்கின்றனர். அப்போது அருகே இருக்கும் இருக்கையில் தோனி அமர்ந்திருப்பதை பார்த்து அப்பெண், அந்த நபரிடம் சைகை காட்டுகிறார்.
தோனியை கண்டதும் அந்த நபர், ‘தல, சார், அண்ணேன்..’ என வாய்க்குளறி, ‘நீங்க இவ்வளோ நாளா காணோம்ல.. அதனால மக்கள்’ என எதையோ கூற வர, அந்த நபரிடம் இருக்கும் ஹெட்போனை தோனி வாங்கிக்கொள்கிறார். பின்னர் ‘சவுண்டு ஓவரா இருக்குல’ எனக்கூறிவிட்டு தோனி புன்னகைக்கிறார். பின்னர் வரும் குரல் அறிவிப்பில், ‘சீட் பெல்ட் போட்டுக்குங்க சார், பிளேனும் ஹெலிகாப்டரும் டேக் ஆஃப் ஆகப்போகுது’ என கேட்கிறது. மேலும், அடுத்து வரும் குரலில் ‘இப்ப ஆட்டம் பேசும்’ எனக் கேட்கிறது.
இதில் தோனி சவுண்டு ஓவரா இருக்கு என்பதும், அடுத்து வரும் ‘இப்ப ஆட்டம் பேசும்’ என்பதும், அவர் தன்னை விமர்சிப்பவர்களுக்கு எதிராக எதுவும் பேச விரும்பவில்லை என்பதையும், தனது ஆட்டத்தை பேச வைப்பார் என்பதை உணர்த்துக்கிறது. அத்துடன் ஒருவருடமாக விளையாடாத போதிலும் அவரது ஆட்டம் சற்றும் குறையவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, பிளேனுடன் ஹெலிகாப்டரும் புறப்படும் எனக்கூறியுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள் தோனி ஹெலிகாப்டர் ஷாட்களை பறக்கவிடுவார் என்பதை பார்க்கும்போதே அந்த வசனம் புரிய வைக்கிறது. இந்த விளம்பரத்தை தோனியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் ஐபிஎல் போட்டிக்காக பயிற்சி மேற்கொண்ட தோனி 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.