வீடியோ; விக்கெட் கீப்பிங்கில் வெறித்தனமாக செயல்பட்ட துருவ் ஜூரல்… தேவை இல்லாமல் விக்கெட்டை பறிகொடுத்த பென் டக்கட்
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 15ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டக்கட் 153 ரன்கள் எடுத்தார்.
இதன்பின் 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 19 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், அடுத்ததாக களத்திற்கு வந்த சுப்மன் கில் 91 ரன்கள் எடுத்து கொடுத்தார். ராஜத் படித்தர் ரன் எதுவும் எடுக்காமலும், குல்தீப் யாதவ் 27 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதனையடுத்து கூட்டணி சேர்ந்த யசஸ்வி ஜெய்ஸ்வால் – சர்பராஸ் கான் ஜோடி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அசால்டாக துவம்சம் செய்து மளமளவென ரன் குவித்தது.
ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி மாஸ் காட்டிய யசஸ்வி ஜெய்ஸ்வால் தனது இரட்டை சதமும் அடித்து அசத்தினார். மறுபுறம் சர்பராஸ் கானும் முதல் இன்னிங்ஸை போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 68* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் 556 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஜாக் கிராவ்லே 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கட் 4 ரன்கள் எடுத்திருந்த போது, துருவ் ஜூரலின் தரமான விக்கெட் கீப்பிங்கால் ரன் அவுட்டானார். அதே போல் ஓலி போப் 3 ரன்னிலும், பாரிஸ்டோ 4 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 28 ரன்களில் தனது 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
துருவ் ஜூரலின் தரமான விக்கெட் கீப்பிங்கால் பென் டக்கட் விக்கெட்டை இழந்த வீடியோ இங்கே;