இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ரோகித் சர்மா இம்முறை 14 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்தது.
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
அரை சதமடித்த புஜாரா 58 ரன்னில் ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்டில் பொறுப்புடன் ஆடிய மயங்க் அகர்வால் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 108 ரன்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் பொறுமையாக ஆடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்துள்ளது. கோலி 63 ரன்னுடனும், ரகானே 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரகானே அரை சதமடித்தார். அவர் 59ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு புறம் தூணாக நின்ற கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 91 ரன்னில் அவுட்டானார். இருவரும் இணைந்து 225 ரன்கள் குவித்தனர்.
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
இதையடுத்து, இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 254 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.