உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது.
338 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர். இங்கிலாந்தின் அற்புதமான பந்துவீச்சில் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ரன் குவிக்க திணறினர். ராகுல் ரன் ஏதும் எடுக்காத நிலையில், வோக்ஸ் பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் சரியான டைமிங் கிடைக்காமல் திணறினார். இதனால், இந்திய அணி முதல் 10 ஓவரில் 1 விக்கெட்டுக்கு வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, இந்த இணை ஓரளவு துரிதமாக ரன் சேர்க்கத் தொடங்கியது. இதன்மூலம், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அரைசதம் அடித்தனர். எனினும், இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது.
இந்த நிலையில், கேப்டன் கோலி 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டைத் தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்கினார். இந்த இணையில் ரோஹித் சர்மா துரிதமாக ரன் சேர்த்தாலும், வெற்றிக்குத் தேவையான ஓவருக்கு 8-க்கு மேல் இருந்தது. எனினும், நம்பிக்கையுடன் விளையாடி வந்த ரோஹித் சர்மா சதம் அடித்தார். சதமடித்த அவர் ரன் வேகத்தை அதிகரிக்க வேண்டிய முக்கியமான நேரத்தில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, பந்த் மற்றும் பாண்டியா சற்று அதிரடி காட்டினர். இந்த நிலையில், வோக்ஸின் அற்புதமான கேட்ச்சால் பந்த் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதுவரை வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் அதிகமாக இருந்தபோதிலும், இந்திய அணி சற்று நம்பிக்கையுடன் விளையாடி வந்தது. ஆனால், இதன்பிறகு இந்திய அணியால் எளிதாக பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை. இதனால், ஓவருக்கு ஓவர் நெருக்கடி மேலும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த இக்கட்டான நிலையில், பாண்டியா 33 பந்துகளில் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு, தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தபோதிலும், இந்திய அணியால் வெற்றி இலக்கை அடையமுடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம், உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்திக்காத ஒரே அணியாக இந்தியா தனது முதல் தோல்வியைச் சந்தித்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இங்கிலாந்து அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
சதம் அடித்த பேர்ஸ்டோவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.