சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய பெண்கள் அணியின் ஜாம்பவான் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றதை அடுத்து வழியனுப்பும் தருணத்தில் கண்கலங்கி இருக்கிறார் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர்.
இங்கிலாந்து மண்ணில் இந்திய பெண்கள் அணி கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் பிறகு முதல் முறையாக ஒருநாள் போட்டிக்கான தொடரை கைப்பற்றியது. இத்தொடருக்கு முன்பாக, “இதுவே எனது கடைசி தொடர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன்.” என பெண்கள் அணியின் லெஜன்ட் ஜுலன் கோஸ்வாமி கூறியிருந்தார்.
கிரிக்கெட் உலகின் மெக்கா என்று அழைக்கப்படும் லாட்ஸ் மைதானத்தில் இவரது கடைசி போட்டி அமையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் கைப்பற்றி தொடரை வென்று விட்டது. சம்பிரதாயப்படி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஓய்வு பெற இருந்த ஜுலன் கோஸ்சாமிக்கு சிறந்த மரியாதையை இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளின் வீராங்கனைகளும் செலுத்தினர்.
போட்டி முடிந்த பிறகு அவருக்கு நினைவு பரிசு கொடுக்கப்பட்டது. அதை வாங்கிக் கொள்ளும் பொழுது அருகில் இருந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழுதார். பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் ஒன்றாக கிரிக்கெட் வாழ்க்கையில் பயணித்திருப்பதால் நெருங்கிய நட்பு கொண்டிருக்கின்றனர். இனிமேல் ஒன்றாக விளையாட முடியாது என எண்ணி ஹர்மன்பிரீத் கவுர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரல் ஆகி உள்ளது.
ஜூலன் கோஸ்வாமி இந்திய அணிக்காக இதுவரை அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 353 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 253 விக்கெட்டுகளை ஒரு நாள் போட்டிகளில் மட்டும் வீழ்த்தியுள்ளார். இது இந்திய அணி வீராங்கனைகளில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த பெண்கள் கிரிக்கெட் உலகில் அதிகபட்சமாக இருக்கிறது. உலகக்கோப்பை தொடரில் மட்டும் 49 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். 39 வயதான இவர் இந்திய அணிக்கு கொடுத்த பங்களிப்பு இன்றியமையாதது என்பதால் சச்சின் டெண்டுல்கர் உட்பட பல்வேறு ஜாம்பவான்கள் இவர் ஓய்வு பெறும் நாள் என்று வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.