உலக சாலைப் பாதுகாப்பு தொடர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியை இந்திய லெஜெண்ட்ஸ் அணி வீழ்த்தி சனிக்கிழமை வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உடன் இர்ஃபான் பதான் மகன் இம்ரான், பாக்ஸிங் செய்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
உலக சாலைப் பாதுகாப்பு தொடருக்கான கிரிக்கெட் போட்டி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய லெஜெண்ட்ஸ் அணியும், வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட்ஸ் அணியும் விளையாடின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. சேவாக், சச்சின் என இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விளையாடினர்.
பல வருடங்களுக்கு பிறகு சேவாக், சச்சின் ஜோடி களத்தில் விளையாடியதை கிரிக்கெட் ரசிகர்கள் ரசித்து பார்த்தனர். இந்த போட்டியில் சச்சின் 36 ரன்களுக்கு ஆட்டமிழக்க சேவாக் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார். இந்தப்போட்டிக்கு பிறகு இர்ஃபான் பதான் மகன் இம்ரான், சச்சின் டெண்டுல்கர் உடன் செல்லமாக விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் சச்சினுடன் குத்துச்சண்டை செய்வதுபோல இம்ரான் விளையாட்டாக குத்துகிறான். அந்த வீடியோவை பகிர்ந்த இர்ஃபான் பதான், இம்ரான் என்ன செய்தான் என்று அவனுக்கு இப்போது தெரியாது. ஆனால் அவன் வளர்ந்ததும் சச்சினுடன் பாக்ஸிங் செய்தோம் என்பது அவனுக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
டெண்டுல்கர் விளையாடிய சில ஷாட்களை பார்க்கும்பொழுது, அவர் கிரிக்கெட்டில் டச்சில் தான் இருக்கின்றார் என்பது போல் தோன்றியது.
போட்டிக்குப் பின் பேசிய சேவாக்,” ஆரம்பத்தில் ஒற்றை ரன்கள் எடுக்க வேண்டாம் என்று சச்சின் கூறியிருந்தார், ஆனால் போக போக விரைவான சிங்கிள் எடுக்கும் வகையில் பேட்செய்தார்; அது உங்களுக்கான சச்சின்” என்றார்
இரிதியாக களமிறங்கிய யுவராஜ் சிங், தனது வழக்கமான அதிரடியை வெளிபடுத்தினர். யுவராஜ் சிங் சிறிது நேரம் தான் களத்தில் இருந்தாலும், அவரின் பேட்டிங்கில் எந்த தடுமாற்றமும் இல்லை.
ஆட்டத்திற்கு பிறகு பேசிய டெண்டுல்கர் : “ 2013 க்குப் பிறகு இங்கு திரும்பி வருவது சிறப்பு. ரசிர்களின் சத்தம் ஆட்டத்தைத் தூண்டியது. நான் ஆஸ்திரேலியாவில் ஒரு ஓவர் விளையாடினேன், ஆனால் அங்கு விளையாடும்போது எல்லாவற்றையும் கடன் வாங்க வேண்டியிருந்தது”என்றார்.
“இந்த போட்டி நடப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இது விழிப்புணர்வு பற்றியது. வாகனம் ஓட்டும் போது, நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு உண்டு. இந்திய அணி விளையாடவில்லை என்றாலும், ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர்”என்று அவர் மேலும் கூறினார்.