இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டி.20 ப்ளாஸ்ட் தொடரில் ஜோ ரூட்டின் பெருந்தன்மையான ஒரு செயல் ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் உள்ளூர் டி.20 தொடரான T20 Blast தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் நேற்றைய போட்டியில் (18-7-21), ஜோ ரூட் தலைமையிலான யார்க்ஷைர் அணியும், டேன் விலாஸ் என்பவர் தலைமையிலான லான்சஸைர் அணியும் மோதின.
இங்கிலாந்தின் மான்சஸ்டரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற யார்க்ஷைர் அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த யார்க்ஷைர் அணிக்கு ஜோ ரூட் 32 ரன்களும், பலான்ஸ் 31 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த யார்க்ஷைர் அணி 128 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய லான்சஸைர் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரை பெரும்பாலான ரசிகர்கள் அரியாவிட்டாலும், இந்த போட்டியின் போது ஜோ ரூட் செய்த ஒரு செயல் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்த போட்டியில் லான்சஸைர் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளுக்கு 15 ரன்கள் தேவை என்றிருந்த போது, பேட்டிங் செய்த வெல்ஸ் என்னும் வீரர் ரன் ஓடும் பொழுது பிட்சில் கால்தவறி கீழே விழுந்தார். கீழே விழுந்த வெல்ஸ் திரும்பி எழ முடியாமல், வலியால் துடித்து கொண்டிருந்ததால், அவரை ரன் அவுட்டாகும் வாய்ப்பு எதிரணிக்கு இலகுவாக கிடைத்தது. ஆனால் கையில் பந்து வந்துவிட்ட போதிலும் யார்க்ஷைர் அணியின் கேப்டனான ஜோ ரூட் ரன் அவுட் செய்யாமல், இப்படிப்பட்ட விக்கெட் தேவை இல்லை என்பது போல் தனது சக வீரர்களிடமும் ரன் செய்ய வேண்டாம் என சைகை செய்து விட்டார், மற்ற வீரர்களும் ரன் அவுட் செய்யாமல் வலியால் துடித்து கொண்டிருந்த எதிரணி வீரருக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்தினர்.
ஜோ ரூட்டின் இந்த செயல் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பாராட்டையும் பெற்றுள்ளது. இக்கட்டான கடைசி நேரத்தில் கூட மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ஜோ ரூட்டை முன்னாள் வீரர்கள் சிலரும் பாராட்டி வருகின்றனர்.