இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 லீக் தொடர் மாபெரும் வெற்றியை பெற்று சர்வதேச அளவில் முன்னணி தொடராக விளங்கி வருகிறது.
ரசிகர்களின் பேராதரவோடு 10 ஆண்டுகளை சிறப்பாக முடித்துள்ளது. இந்த வருடம் 11-வது வருத்தில் காலடி எடுத்து வைக்க இருக்கிறது. இதற்கு முன் ஒவ்வொரு அணியும் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்ற விதிமுறை இருந்தது.
தற்போது அனைத்து வீரர்களையும் மறு ஏலம் விடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனால் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை நேரடியாக தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற இரண்டு பேரை ஏலத்தின்போது தக்கவைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடவில்லை. இதனால் குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி பங்கேற்றன.
2018 சீசனில் இந்த இரண்டு அணிகளும் பங்கேற்காது. வீரர்களின் ஏலம் வருகிற 27-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் நடக்கிறது. இதற்கு முன் எந்தெந்த அணி யார் யாரை தக்கவைத்துள்ளது என்பதை இன்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது அதிகாரப்பூர்வமாக தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் விளையாடியவர்களில் டோனி, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. டோனியை முதல் நபராகவும், ரெய்னாவை 2-வது நபராகவும், ஜடேஜாவை 3-வது நபராகவம் தக்கவைத்துக் கொண்டது.