வீடியோ; புது விதமான ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்திய ரஷித் கான்
யார்க்கரில் ரன் எடுப்பது கடினம், அதை விட அதில் விக்கெட்டை இழக்காமல் இருப்பது கடினம், ஆனால் இந்திய நட்சத்திரம் எம்.எஸ்.தோனி அதற்கென்றே ஒரு ஷாட்டை வடிவமைத்தார், அது ஹெலிகாப்டர் ஷாட் என்று பிரபலமானது.
மட்டை ஒரு முழு சுற்று சுற்ற பந்து மைதானத்துக்கு வெளியே பறக்கும். இது தோனி ரக ஸ்பெஷல், அதன் பிறகு பலரும் இதை ஆடத் தொடங்கினர், குறிப்பாக ஆப்கான் வீரர்கள் இதனைக் கடைபிடித்தனர், சமீபத்தில் ரஷீத் கான் அதே ஹெலிகாப்டர் ஷாட்டில் புதுமை ஒன்றை புகுத்தியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ரஷீத் கானே தனது பல்வேறு சமூகவலைத்தளங்களில் தன்னுடைய இந்த புதிய ஷாட்டின் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “இது என்ன ஷாட்? ஹெலிகாப்டர் ஷாட்? அப்படித்தான் நினைக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ஆனால் ரஷீத் கானுடன் ஆடும் சக ஆப்கான் வீரர் ஹமித் ஹசன் இதனை ‘நிஞ்சா கட்’ என்று வர்ணித்துள்ளார். இந்த வீடியோவை ஐபிஎல் அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
பொதுவாக ஹெலிகாப்டர் ஷாட் மிட் ஆன், மிட்விக்கெட் பகுதிகளில்தான் செல்லும் , ஆனால் ரஷீத் கானின் ஷாட் தேர்ட் மேன் மேல் சிக்ஸ் சென்றது. இதைப் பலர் ரிவர்ஸ் ஹெலிகாப்டர் ஷாட் என்றும் வர்ணிக்கின்றனர்.
மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் அயர்லாந்து, ஆப்கான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகிறது.