சூரத் நகரில் நேற்று நடந்த சயித் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் கடைசி வரை பரபரப்பாக நடந்த ஆட்டத்தில், தமிழக அணியை ஒரு ரன்னில் வீழ்த்தி கோப்பையைத் தக்கவைத்தது நடப்பு சாம்பியன் கர்நாடக அணி.
தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோரின் கடின உழைப்பும் கடைசி ஓவரை இருவரும் அடித்து ரன்களைச் சேர்த்ததும் ஒரு ரன் இல்லாமல் வீணாகிப்போனது.
விஜய் சங்கர் மட்டும் கடைசி ஓவரில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆட்டம் தமிழகம் பக்கம் திரும்பி இருக்கும்.
கடந்த மாதம் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியிலும் இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியிடம் தோல்வி அடைந்த தமிழக அணி இந்தப் போட்டியிலும் கர்நாடகத்திலும் தோல்வி அடைந்தது.
கர்நாடக அணியின் கேப்டன் மணிஷ் பாண்டேவின் அபாரமான அரை சதம் கர்நாடக அணியின் ரன் குவிப்புக்கு உதவியது. அதுமட்டுமல்லாமல் கர்நாடக அணி வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும் கோப்பையை வெல்வதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
முதலில் பேட் செய்த கர்நாடக அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்தது. 181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் சேர்த்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.
முதலில் பேட் செய்த கர்நாடக அணிக்கு விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 22 ரன்களும், தேவ்தத் படிக்கல் 32 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் டக்அவுட்டில் அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ரோஹன் காடம், மணிஷ் பாண்டே கூட்டணி, அணியைச் சரிவிலிருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய மணிஷ் பாண்டே 40 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். காடம் 35 ரன்களும், கருண் நாயகர் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தமிழகம் தரப்பில் ரவிச்சந்திர அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
181 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. தமிழக தொடக்க வீரர்கள் ஷாருக்கான் (16), நிஷாந்த் (14) நல்ல தொடக்கம் அளித்த போதிலும் நிலைக்கவில்லை. அடுத்துவந்த வீரர்களான வாஷிங்டன் சுந்தர் (20), தினேஷ் கார்த்திக் (24) விரைவாக வெளியேறினார்கள்.
நடுவரிசையில் களமிறங்கிய அபராஜித் (40), விஜய் சங்கர் (44) ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர்.
கடைசி இரு ஓவர்களில் 25 ரன்கள் தேவைப்பட்டது. விஜய் சங்கர் 37 ரன்களிலும், அஸ்வின் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர். 19-வது ஓவரில் விஜய் சங்கரும், ரவிச்சந்திர அஸ்வினும் தலா ஒரு பவுண்டரி உள்பட 13 ரன்கள் சேர்த்தனர்.
இதனால், கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை கவுதம் வீசினார். முதல் மற்றும் இரண்டாம் பந்தில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை ரவிச்சந்திர அஸ்வின் அடித்தார்.
மூன்றாவது பந்தில் ரன் ஏதும் அடிக்கவில்லை. 4-வது பந்தில் அஸ்வின் ஒரு ரன் அடிக்க, 5-வது பந்தை விஜய் சங்கர் எதிர்கொண்டார். வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 5-வது பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் அவசரப்பட்டு ஓடி மணிஷ் பாண்டேவால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் 44 ரன்னில் விஜய் சங்கர் வெளியேறினார்.
கடைசி ஒருபந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முருகன் அஸ்வின் பந்தை கவனிக்காமல் விட, ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதனால், தமிழக அணி த்ரில்லான ஆட்டத்தில் ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.
கர்நாடகத் தரப்பில் மோர் 2 விக்கெட்டுகளையும், கவுதம், கோபால் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.