இங்கிலாந்தில் நடக்கும் டி20 ப்ளாஸ்ட் லீக் போட்டியில் நாட்டிங்கம்ஷைர் அணிக்காக விளையாடும் பாகிஸ்தான் வேகப்பந்து நட்சத்திரம் ஷாஹின் அப்ரிடி, வார்விக்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் முதல் ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி அபார சாதனை படைத்திருக்கிறார்.
இங்கிலாந்தில் வருடா வருடம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் டி20 ப்ளாஸ்ட் லீக் தொடரில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்று லீக் சுற்றுகள் நடைபெறும். அதேபோன்று இந்த வருடம் டி20 ப்ளாஸ்ட் சீசன் நடைபெற்று வருகிறது.
அதில் நேற்றைய தினம் நாட்டிங்கம் மற்றும் வார்விக்ஷைர் அணிகள் மோதின. போட்டியில் நாட்டிங்கம் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதிகபட்சமாக டாம் முரஸ் 42 ரன்கள், லின்டன் ஜேம்ஸ் 37 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் அடித்தது நாட்டிங்கம் அணி.
இந்த இலக்கை சேஸ் செய்த வார்விக் அணிக்கு மிகப்பெரிய இடி காத்திருந்தது. முதல் ஓவரை வீசிய ஷாஹின் அப்ரிடி ஓவரின் முதல் பந்தில் கேப்டன் அலெக்ஸ் டேவிஸ் விக்கெட்டை தூக்கினார். அடுத்ததாக உள்ளே வந்த பெஞ்சமின் விக்கெட்டை இரண்டாவது பந்திலேயே தூக்கினார்.
மீண்டும் ஐந்தாவது பந்தில் டான் மவுஸ்லி விக்கெட்டை வீழ்த்தினார். ஆறாவது பந்தில் எட் பர்னாட் விக்கெட் தூக்க, போட்டியின் முதல் ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் டி20 வீரர் எனும் அபார சாதனையை படைத்தார். அது சர்வதேச கிரிக்கெட் அளவில் வரவில்லை என்றாலும், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சாதனையாக பார்க்கப்படுகிறது.
எக்ஸ்ட்ராக்கள் உட்பட முதல் ஓவரில் ஏழு ரன்கள் அடித்திருந்தாலும் நான்கு விக்கெட்டுகளை இழந்ததால், வார்விக்ஷைர் அணி இனி எப்படி போட்டியை சமாளிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதன் பின்னர் மழை குறுகிட்டது. இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. மற்றொரு துவக்க வீரர் ராப் யாட்டஸ் அபாரமாக விளையாடி 46 பந்துகளில் 65 ரன்கள் அடித்தார்.
கடைசியில் வந்த ஜேக்கப் மற்றும் ஜேக் இருவரும் தலா 27 ரன்கள் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். கிளென் மேக்ஸ்வெல் தனது பங்கிற்கு 19 ரன்கள் அடித்தார். 19.1 ஓவரில் இலக்கை எட்டி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது வார்விக்ஷைர் அணி.
சாகின் அப்ரிடி முதல் ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் அவரது அணி தோல்வியை தழுவியது. இருப்பினும் தனது பந்துவீச்சில் நான்கு ஓவர்களில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.