வாஷிங்டன் சுந்தரின் ஆல் ரவுண்ட் அசத்தல் காரணமாக, தமிழக கிரிக்கெட் அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
சையது முஸ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் போட்டியின் சூப்பர் லீக் சுற்று போட்டிகள், சூரத்தில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட், 18.1 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. கேப்டன் சவுரப் திவாரி மட்டும் அதிகப்பட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.
தமிழக அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் எம்.சித்தார்த் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும், சாய் கிஷோர், முருகன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய தமிழக அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 38 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியை அடுத்து தமிழக அணி, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
ராஜஸ்தான் வெற்றி:
ராஜஸ்தான்-தில்லி இடையே நடைபெற்ற சூப்பா் லீக் ஆட்டம் ஒன்றில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை குவித்தது. தீபக் சாஹா் 55, ராஜேஷ் பிஷ்னோய் 36 ரன்களை சோ்த்தனா்.
பின்னா் ஆடிய தில்லி அணி 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. ரிஷப் பந்த் 30 ரன்களை எடுத்தாா். ராஜஸ்தான் தரப்பில் அா்ஜித் குப்தா 3, அங்கித், கலீல் அகமது, ராகுல் சாஹா் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.