கரோனா வைரஸ் உலகெங்கும் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருவதால் உலகத்தில் விளையாட்டுப் போட்டிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன, இந்நிலையில் விளையாட்டு வீரர்கள் வீடுகளில் தங்களுக்கேயுரிய வகையில் பொழுதைப் போக்கி வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சமூக அன்னியமாதலை அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயஸ் அய்யர் வீட்டில் சிலபல மேஜிக் விளையாட்டுகளில் நிபுணத்துவம் பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக பிசிசிஐ சனிக்கிழமையன்று 91 விநாடி கால அளவு கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது, இதில் அய்யர் தன் சகோதரி நடாஷாவுடன் சீட்டுக்கட்டு மேஜிக்கில் ஈடுபட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
“மெஜீஷியன் ஷ்ரேயஸ் அய்யர் நாம் வீட்டில் அடைந்து கிடக்கும் வேளையில் நம்மை கேளிக்கைக்கு இட்டுச் செல்கிறார், புன்னகையை கொண்டு வந்ததற்கு நன்றி சாம்பியன்” என்று பிசிசிஐ வாசகத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி உட்பட அனைவரும் அரசு வழிமுறைகளை குடிமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
நாளை ஞாயிறன்று பிரதமர் மோடி கோரிக்கைக்கு இணங்க ‘மக்கள் ஊரடங்கு’ காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியும் தொடர்ந்து கண்காணித்தும் சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும், மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.
அதில், கொரோனாவை எதிர்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தேவையான நடவடிக்கைகளை விரைவாக செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரிகளில் போதிய படுக்கை வசதிகள் செய்யவும், தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவுக்கு வென்டிலேட்டர்கள் வைக்கவும், ஆக்ஸிஜன், முக கவசங்கள் தயாராக வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தாக்குதலில் இந்தியா தற்போது 2-வது நிலையில் உள்ளது. 3-வது நிலையான சமூக பரவல் நிலைக்கு செல்லாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.