இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் பாலோ-ஆன் பெற்ற தென் ஆப்பிரிக்கா 3-ம் நாள் தேநீர் இடைவெளி வரை 4 விக்கெட்டுக்கு 26 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை ரகானே மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்தனர்.
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய ரகானே சதமடித்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. இந்தியா 116.3 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்திருக்கும்போது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
நேற்றைய 2-வது நாள் தேனீர் இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்தது. 5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி 162 ரன்களில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக சுபைர் ஹம்சா 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், அஸ்வின், முகமது சமி மற்றும் நதீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்திய அணி 335 ரன்கள் முன்னிலை எடுத்து தென் ஆப்பிரிக்காவுக்கு பாலோ ஆன் வழங்கியது. இதையடுத்து பாலோ-ஆன் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணி பேட் செய்ய தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக்கும், டீன் எல்கரும் களமிறங்கினர். 5 ரன்கள் எடுத்த நிலையில் குயிண்டன் டி காக் உமேஷ் யாதவ் பந்தில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் டு பிளிசிஸும் 4 ரன்களில் அவுட் ஆனார்.
தற்போது, தேநீர் இடைவெளி வரை 9.3 ஓவர்களில் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்க அணி திணறி வருகிறது.