யுவராஜ் சிங் என்றாலே 2007-ல் நடந்த முதல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடை ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி 12 பந்துகளில் அரைசதம் அடித்து இன்னமும் கெய்லினால் கூட கடந்து விட முடியாத டி20 உலகச்சாதனையை தன் வசம் வைத்திருப்பவர் யுவராஜ் சிங்.
ரசிகர்கள் எப்போதுமே யுவராஜ் இறங்கினால் ஏதோ ஒன்று வித்தியாசமாக நடக்கும் என்று எதிர்பார்ப்பது வழக்கம். அவரும் அதனை பூர்த்தி செய்து வருகிறார்.
அன்று டெல்லிக்கு எதிராக 50 ரன்கள் எடுத்து அவருக்கென இருக்கும் பிரத்யேக ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக இறங்கிய யுவராஜ் சிங் 8 பந்துகளில் 5 ரன்கள் எடுத்திருந்த போது இன்னிங்சின் 14வது ஓவரை சாஹல் வீச வந்தார். சாஹல் அது வரை 2 ஓவர்கள் 12 ரன்களையே விட்டுக் கொடுத்திருந்தார்.
ரிஸ்ட் ஸ்பின்னெல்லாம் வெளிநாட்டு வீரர்களைத்தான் அச்சுறுத்தும் இந்திய அணியின் மூத்த வீரர்களையெல்லாம் ரிஸ்ட் ஸ்பின் அச்சுறுத்தாது என்பதற்கு உதாரணமாக முதல் பந்தை ஸ்கொயர் லெக் மேல் சிக்ஸ் தூக்கினார்.
அடுத்த பந்து ஃபுல் லெந்த் யுவராஜுக்கு பிடித்த லெந்த் அவருக்கும் நமக்கும் அவரிடம் பிடித்த ஷாட், பவுலர் தலைக்கு மேல் நேராக சிக்ஸ், அருமையான பேட்ஸ்விங். அடுத்த பந்து ஷார்ட் பிட்ச் லாங் ஆன் மேல் மெஜஸ்டிக்கான சிக்ஸ்.
3 பந்து தொடர்ச்சியாக 3 சிக்ஸ் என்றவுடன் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்தில் இன்னொரு 6 சிக்ஸ் சம்பவம் நடக்குமா என்று எகிறிக் குதித்தனர்.
ஆனால் சாஹல் புத்திசாலித்தனமாக கூக்ளி ஒன்றை வீச யுவராஜ் அசரவில்லை லாங் ஆஃபில் தூக்கினார் ஆனால் பந்து சரியாகச் சிக்காமல் மொகமது சிராஜ் கையில் கேட்ச் ஆனது, கோலி முகத்தில் நிம்மதி பிறந்தது, 12 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 23 ரன்களில் யுவராஜ் சிங் வெளியேறினார், சாஹல் 3 சிக்சர்களுக்குப் பழிதீர்த்தார். 3 ஒவர்களில் சாஹல் 32 ரன்கள் என்று ஆனார்.
இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெங்களூர் அணி, தொடக்கத்திலேயே மொயின் அலி விக்கெட்டை 13 (7) ரன்களில் இழந்தது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர் பார்திவ் படேல் மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 31 (22) ரன்களில் பார்திவ் படெல் நடையை கட்ட, 46 (32) ரன்களில் கோலி அவுட் ஆனார்.
பின்னர், வந்த ஏபி டி வில்லியர்ஸ் இறுதிவரை அவுட் ஆகாமல் வெற்றிக்கு போராடினார். ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பும்ரா மற்றும் மலிங்கா சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை வெற்றி பெறச் செய்தனர். இதனால், மும்பை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.வ்