“ப்பா.. ஷான் பொல்லாக் மாதிரி தெறிக்க விடுறாரு”; இந்திய பந்துவீச்சாளரை புகழ்ந்த தென்னாபிரிக்க ஜாம்பவான்!!

முகமது ஷமியின் பந்துவீச்சு ஷான் பொல்லாக்கை நினைவுக்கு கொண்டுவருகிறது என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேரில் குல்னன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 327 ரன்கள் அடித்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடி வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி. சிராஜ் மற்றும் சமியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து திணறினர். முகமது ஷமியின் வேகமும் ஒவ்வொரு பந்துக்கும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை முகமது சமி கைப்பற்றி இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு உதவிகரமாக இருந்தார். இவருக்கு பக்கபலமாக சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் இருந்தனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் முகமது சமி டெஸ்ட் அரங்கில் தனது 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார். இந்த மைல்கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றிய முகமது ஷமியின் பந்துவீச்சு ஷான் பொல்லாக் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய வீரர்களின் பந்து வீச்சை எனக்கு நினைவூட்டுகிறது என புகழாரம் சூட்டியிருக்கிறார் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் டேரில் குல்னன்.

“முகமது சமியின் வேகம் அவ்வளவு அற்புதமாக இருக்கிறது. அவர் பந்துவீசும் வித்தைப் பார்க்கையில் எனக்கு ஷான் பொல்லாக் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் பந்துவீச்சை நினைவுக்கு கொண்டுவருகிறது. இவர்கள் இருவரும் பேட்ஸ்மேன்களை தங்களது வேகத்தைக் கொண்டு அச்சுறுத்த மாட்டார்கள். அதே நேரம் வேகம் மற்றும் பந்துவீசும் விதத்தின் நுணுக்கம் என இரண்டும் கலந்து, திணறடிப்பார்கள். பொல்லாக், வெவ்வேறு விதமான பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பார். அடிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே பேட்ஸ்மேன்கள் பலமுறை ஆட்டமிழந்ததை நான் பார்த்திருக்கிறேன். அப்படியான பந்துவீச்சை முகமது சமி செய்கிறார்.

இந்திய அணியில் இருந்து இப்படி ஒரு வேகப்பந்து வீச்சாளர் வளர்ந்திருப்பதை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கிறது. பொதுவாக, இந்திய அணி சுழற்பந்து வீச்சை நம்பியிருக்கும். ஆனால் சமீபகாலமாக அதன் வேகப்பந்து வீச்சு உலகத்தரம் மிக்கதாக இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா மைதானங்களில் பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இந்திய வீரர்கள் எந்த ஒரு கடினமும் இல்லாமல் பலமுறை அனுபவப்பட்ட மைதானம் போல பந்துவீசுவதும் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கிறது.” என்று புகழ்ந்தார்.

Mohamed:

This website uses cookies.