காலில் ரத்தக் காயத்துடன் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவை வெற்றியின் அருகில் கொண்டு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்ஸன் குணமடைய ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12-வது ஐபிஎல் டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி ஒரு ரன்னில் தோற்றபோதிலும், அந்த அணி வீரர் ஷேன் வாட்ஸன் செயல் இன்று நெட்டிசன்கள் மத்தியிலும், சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியிலும் புகழப்பட்டு, பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்த பின்னர் ஷேன் வாட்ஸன் காயத்துடன் மெதுவாக நொண்டிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் ஐபிஎல் ரசிகர்கள் பலர் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர்.
தன் காலில் அடிபட்டும் கூட ரத்தம் வழிந்தபடியே வாட்சன் பேட்டிங் செய்திருக்கிறார். யாருமே இதை கவனிக்காத நிலையில் இது குறித்து சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இதுதொடர்பான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் வாட்சனுக்கு அடிப்பட்டு காலில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதை யாரிடமும் சொல்லாமல் அணிக்காக வாட்சன் விளையாடினார். போட்டிக்கு பின்னர் ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஹர்பஜனின் பதிவுக்கு பிறகே வாட்சன் ரத்தக்கறையுடன் விளையாடிய புகைப்படத்தை அனைவரும் கவனித்துள்ளனர். அணி வித்தியாசம் இன்றி அனைவருமே வாட்சனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இது தான் வேலையின் மீதுள்ள பற்று என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். வாட்சன் தான் இந்த ஐபிஎல்லின் உண்மையான ஹீரோ என்றும் பலர் நெகிழ்ச்சியாக தெரிவிக்கின்றனர்.
ஐபிஎல் போட்டிகளின் தொடக்க ஆட்டங்களில் வாட்சன் பெரிதாக ஜொலிக்கவில்லை. ஆனால் அவர் மீது முழு நம்பிக்கை வைத்த சென்னை அணி கேப்டனும், பயிற்சியாளரும் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினர். தன் மீது அணி வைத்த நம்பிக்கைக்கு ஈடாக இரு மடங்கு உழைப்பை வாட்சன் கொடுத்து இருக்கிறார் என்று சிலாகிக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள்.