டெஸ்ட் கேப்டனாக முதல் அதிகாரப் பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பில் ஆப்கான் டெஸ்ட் கேப்டன் அஸ்கர் ஸ்டானிக்சாயை வரவேற்ற கேள்வியே ‘என்ன பதற்றமாக இருக்கிறதா?’ என்பதாக இருந்தது.
ஆனால் அவரும் சற்றும் பதறாமல் “பதற்றமா? என்ன பதற்றம்?” என்று பதில் கேள்வி எழுப்பினார். மேலும் பதற்றமா? இப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன் என்றும் கூறினார் ஸ்டானிக்ஸாய்.
ஆனால் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் பெரும்பாலான கேள்விகளை எதிர்கொண்டார்.
“நான் அயர்லாந்துடன் நீண்ட காலம் பணியாற்றினேன். ஆனால் அங்கு ஆப்கான் போல் இளம் வீரர்களை அவ்வளவாகக் கொண்டு வரவில்லை. பேட்டிங் கொஞ்சம் குறைவுதான், ஆனால் இளம் வேகப்பந்து வீச்சாளரை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்.
எங்கள் தயாரிப்பு நன்றாக உள்ளது இன்னமும் 12-13 வீரர்கள் சிகப்புப்பந்தில் நல்ல பயிற்சியுடன் உள்ளனர். அதிர்ஷ்டவசமாக 3 வேகப்பந்து வீச்சாளர்கள் (வஃபாதார், சயித் ஷிர்சாத், யமீன் அகமட்சாய்) ஆகியோர் டி20 அணியில் இல்லை. அவர்கள் டெஸ்ட் தயாரிப்பில் முழு கவனம் செலுத்தினர். 2 மூத்த ஸ்பின்னர்கள் நபி மற்றும் ரஷீத் விரைவில் தங்களை டெஸ்ட்டுக்கு வடிவமைத்துக் கொள்வார்கள்.
நாங்கள் ஜடேஜா, அஸ்வின் குல்தீப் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்களிடமும் ஒரு குல்தீப் இருக்கிறார் அவர் ஜகீர் கான். இவர்கள் கடினமாகத் தயாரித்துள்ளனர் என்று மட்டும் நான் கூற விரும்புகிறேன். பெங்களூரு பிட்ச் நன்றாக வறண்டு பந்துகள் திரும்பும் என்றே நினைக்கிறேன். ரஷீத் கான் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஒரு ஸ்பின்னர்” என்றார் சிம்மன்ஸ்.
அவரிடம் விராட் கோலியைப் பற்றி கேள்வி எழுப்பிய போது, “விராட் போன்ற ஒரு வீரர் இல்லாதது ஏமாற்றமே, ஆனாலும் நாங்கள் இதனை எங்களுக்கான வெற்றி வாய்ப்பாக பார்க்கிறோம். இந்தியாவை வீழ்த்தலாம் ஆனால் விராட் கோலியை வீழ்த்த முடியாது அவர் இல்லாதது ஏமாற்றமளித்தாலும் அவருக்கு எப்போதும் பந்து வீசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவை இந்தியாவில் விளையாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம், விராட் கோலி இந்தியா அல்ல” என்றார்.