தல தோனிக்காக கோப்பையை வெல்வோம்; சின்ன தல சுரேஷ் ரெய்னா நம்பிக்கை
நடப்பு ஐ.பி.எல் டி.20 தொடரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனிக்காக நிச்சயம் வெல்லும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற அனைத்து தொடரிலும் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.
ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா இடம்பிடித்து விளையாடி வருகிறார். இரண்டு ஆண்டுகள் தடைக்குப்பின் தற்போது களம் இறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் அணி போன்று விளையாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரெய்னா கூறுகையில் ‘‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சில வீரர்கள் தங்களது இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அணியின் வெற்றிக்கான பொறுப்பை கையில் எடுத்துள்ளனர். இப்படி இருக்கும்போது நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் சாம்பியன் அணி போன்றுதான் விளையாடுகிறோம். நாங்கள் எங்களுடைய போட்டிகளை பயமின்றி விளையாடுகிறோம்’’ .
“எங்கள் அணியை வயதான அணி என்று கூறுகின்றனர். ஆனால் அனுபவம் தேவை. அனைத்துப் பெருமைகளும் தோனையையே சாரும், பாருங்கள் அவர் எவ்வளவு சுதந்திரமாக ஆடுகிறார் என்று. 35-36 வயதிலும் சிறப்பாக ஆட முடியும் என்பதை அவர் இந்த ஐபிஎல்-ல் நிரூபித்துக் காட்டியுள்ளார். நிச்சயம் தோனிக்காக இந்த முறை சாம்பியன் கோப்பையை வெல்லும்” என்றார்.