பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது என வங்கதேச முன்னணி ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்தார். மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து அணிகளை வீழ்த்தி முத்தரப்பு கோப்பையை வென்ற அதே உற்சாகத்துடன் 2019 உலகக் கோப்பையில் களமிறங்கிய வங்கதேச அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
அதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 330 ரன்கள் குவித்தது. இதுவே வங்கதேச அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்தப் போட்டியில் 75 ரன்கள் குவித்த வங்கதேச அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:
இந்த உலகக் கோப்பைத் தொடரில் நாங்கள் சந்திக்கவுள்ள அனைத்து சவால்களுக்கும் கடந்த காலத்தில் எங்களை தயார்படுத்திக்கொண்டோம். குறிப்பாக மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து உடனான முத்தரப்பு தொடர் எங்களை தயார்படுத்திக்கொள்ள பெரிதும் உதவியது. அதுவே எங்கள் அணியின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. இது வெறும் தொடக்கம் தான் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இன்னும் நிறைய சவால்கள் எங்களுக்கு காத்திருக்கின்றன.
கடந்த 12 ஆண்டுகளில் வங்கதேச கிரிக்கெட் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதுதான் எங்கள் ரசிகர்களுக்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரணிகளுடனான எங்கள் தோல்விகளை ரசிகர்கள் ஏற்பதில்லை. இதனால் எங்களுடைய ஆட்டமும் மேம்பட்டுள்ளது. இது எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அணிகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தார்.
இதில் விரைவாக 250 விக்கெட்டுகளை 199 போட்டிகளில் சஹிப் அல் ஹசன் மட்டுமே எட்டி சாதனை படைத்துள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் ரசாக் 258 போட்டிகளிலும், அப்ரிடி 273 போட்டிகளிலும், காலிஸ் 296 போட்டிகளிலும், ஜெயசூர்யா 304 போட்டிகளிலும் 250 விக்கெட்டுகளை எட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக், ஷாகித் அப்ரிடி, தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஜேக்ஸ் காலிஸ் ஆகியோர் மட்டுமே 250 விக்கெட்டுகளையும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களையும் சேர்த்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
250 விக்கெட்டுகள் + 5 ஆயிரத்துக்கும் மேல் ரன்கள்
1. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் 269 விக்கெட்டுகளையும் 5080 ரன்கள் சேர்த்துள்ளார்.
2. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி 395 விக்கெட்டுகளையும், 8,064 ரன்கள் சேர்த்துள்ளார்
3.இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 323 விக்கெட்டுகளையும் 13,430 ரன்களும் சேர்த்துள்ளார்.
4.தெ.ஆப்பிரிக்க முன்னாள்வீரர் ஜேக்ஸ் காலிஸ் 273 விக்கெட்டுகளையும், 11,579 ரன்களும் சேர்த்துள்ளார்.