புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை; பிசிசிஐ அதிகாரி பதில்

புதிய பயிற்சியாளரை நியமிப்பது குறித்து எவரிடமும் நாங்கள் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் விராட் கோலிக்கு பதில் அளித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் உடனடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் நடக்க உள்ளதால் மேலும் 45 நாட்களுக்கு இவர்களின் பதவி காலத்தை பிசிசிஐ நீட்டிப்பு அறிவிப்பு வெளியிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்காக பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பதவிகளுக்கு வர விரும்புவோர் விண்ணப்பங்கள் மூலம் தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று பிசிசிஐ கூறியிருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 30ம் தேதி வரை வரவேற்கப்பட்டது.

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்வதற்கு முன்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய விராட் கோலி, “நாங்கள் ரவி சாஸ்திரியிடம் நல்ல நட்புறவுடன் இருக்கின்றோம். எனக்கு தனிப்பட்ட முறையில் அவர் பயிற்சியாளராக மீண்டும் வந்தால் மிகவும் மகிழ்ச்சி” என கூறினார்.

இதற்கு பதிலளித்த பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அனுஷுமன் கெய்க்வாட் கூறுகையில், “விராட் கோலி தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் பயிற்சியாளர் தேர்விற்கு சில தகுதிகளை நாங்கள் அடிப்படையாக வைத்து உள்ளோம். அதில் மீண்டும் ரவிசாஸ்திரி தேர்வானால் நிச்சயம் அவரை கணக்கில் கொள்வோம்.

சரியான திட்டமிடல், அணி மேலாண்மை, சிறந்த தொழில்நுட்ப நிபுணத்துவம், நல்ல உடல் தகுதி ஆகியவற்றை கொண்ட சிறந்த பயிற்சியாளர் நாங்கள் தேடி வருகிறோம். யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் அவர் பதிலளித்தார்.

கபில்தேவ் தலைமையிலான பயிற்சியாளர் தேர்வுக் குழுவில் அனுஷுமன் கெய்க்வாட் மற்றும் மகளிர் அணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை ஆராய்ந்து இவர்கள் விரைவில் பயிற்சியாளர்கள் யார் என்பதை வெளியிடுவார்கள் என்பதையும் அவர் தெரிவித்தார்.

Prabhu Soundar:

This website uses cookies.