தற்போது வரை எங்களது சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணி என்னவென்று தெரியவில்லை என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் திடுக்கிடும் பதில் கொடுத்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் இருந்து வரும் இயான் மார்கன், இங்கிலாந்து அணி முதல்முறையாக 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறார். ஒருநாள் போட்டியை பொறுத்தவரை இங்கிலாந்து அணி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இருப்பினும் அந்த அணியில் குறிப்பிட்ட சில வீரர்களை தவிர மற்றவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறார்கள். இந்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஏனெனில் உலகில் சிறந்த அணியாக விளங்கும் ஒரு அணி அடிக்கடி அதில் இருக்கும் வீரர்களை மாற்றிக்கொண்டே இருந்தால் அணி வீரர்கள் மத்தியில் பிணைப்பு இருக்காது என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் விதமாக இன்னும் சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யவில்லை அதற்கான முடிவுகளை விரைவில் அணி நிர்வாகமும் தேர்வு குழுவும் எடுக்கும். இந்த செயல் வருகிற உலக கோப்பைக்கு மிகவும் உதவியாக இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
அவர் அளித்த பேட்டியில், “தற்போதிருக்கும் இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஆறு முதல் ஏழு வீரர்கள் மட்டுமே நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். மீதமிருக்கும் வீரர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதற்கான காரணம் யார் சரியானதாக இருப்பார் என்பதன் அடிப்படையிலேயே.
முதல் கட்டமாக சிறந்த ஆறு பேட்ஸ்மேன்களை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்ததாக உலக கோப்பை மைதானங்களுக்கு ஏற்றவாறு இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களை அணியில் எடுக்க வேண்டும். கூடுதல் பந்துவீச்சு தேர்வாக இரண்டு ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்ய வேண்டும். தற்போது எங்கள் மனதில் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரன் இருவரும் இருக்கின்றனர்.
England’s captain Eoin Morgan, right, and teammate Ben Stokes leave the filed at the end of Pakistan innings during the Cricket World Cup match between England and Pakistan at Trent Bridge in Nottingham, Monday, June 3, 2019. (AP Photo/Rui Vieira)
பின்னர் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை கருத்தில் கொண்டுள்ளோம். இதன் அடிப்படையிலேயே எங்கள் அணிக்கான தேர்வு இருக்கப்போகிறது. வருகிற தொடர்களில் இதன் அடிப்படையில் தேர்வு செய்வோம்.
இறுதியில், ஒரு அணிக்கு வெற்றி மட்டுமே முக்கியமானதாக இருக்கும். அந்த வெற்றியில் வீரர்கள் சரியான இடத்தில் சரியான பங்களிப்பை அளிக்க வேண்டும். இல்லை எனில் அவர்கள் திறமை இல்லை என அர்த்தமல்ல. நாங்கள் சரியாக பயன்படுத்த வில்லை என்பதே காரணமாக இருக்கும். அவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.” என அணி தேர்வின் திட்டத்தை தெரிவித்தார்.