ஆஸ்திரேலிய அணியினர் வாயை மூடிக்கொண்டு நைஸ், ஜென்டில்மேன் கிரிக்கெட் ஆடினால் ஒரு வெற்றியைக் கூட ஈட்ட முடியாது, ஆக்ரோஷம் நம் ரத்தத்தில் கலந்தது, எனவே எதிரணியினர் நம்மை விரும்ப வேண்டும் என்று ஆஸி. கவலைப்படுவதை விடுத்து வெற்றிக்காக ஆட வேண்டும் வெற்றிதான் அனைவருக்கும் விருப்பமானது என்று ஜஸ்டின் லாங்கர், டிம் பெய்ன் ஆகியோரின் புதிய கட்டுப்பாடுகளை முன்னாள் கேப்டன் கிளார்க் சாடியிருந்தார்.
இது குறித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்னிடம் கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது:
எதிரணியினர் நம்மை விரும்ப வேண்டுமென்றெல்லாம் யாரும் பேசவும் இல்லை நினைக்கவும் இல்லை. ஆஸ்திரேலிய மக்களின் நம்பிக்கையைப் பெறுவது பற்றித்தான் பேசினோம், விவாதித்தோம். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய ரசிகர்களும் மக்களும் விரும்ப வேண்டும். ஆனால் எதிரணியினர் நம்மை விரும்புகின்றனரா இல்லையா என்பது பற்றியெல்லாம் ஒரு துளியும் அக்கறையில்லை.
கட்டுப்பாட்டுடன் ஆஸ்திரேலிய பாணி கிரிக்கெட்டைத்தான் ஆடப்போகிறோம். மைக்கேல் கிளார்க் கூறுவது போல்தான் ஆடுவோம் அதில் மாற்றமில்லை. துபாயில் வீர்ர்கள் கடினமாகப் போராடினர், அதே போல் கடினமாக ஆடுவோம். இப்போது சில மூத்த வீரர்களும் அணிக்குள் வந்துள்ளனர். ஸ்டார்க், கமின்ஸ் ஹேசில்வுட் இருக்கும் போது வீரர்களுக்கு தானாகவே நம்பைக்கைப் பிறக்கும். டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ், ஆகியோர் மூலமும் அணிக்கு நம்பிக்கை கிடைத்துள்ளது. தன்னம்பிக்கையுடன் கூடிய ஆக்ரோஷ கிரிக்கெட் இதைத்தான் ஆஸ்திரேலிய பாணி கிரிக்கெட் என்கிறோம் நிச்சயமாக அப்படித்தான் ஆடுவோம்.
முன்பு எதிரணியினருடன் களத்தில் வார்த்தைப் பரிமாற்றங்களில் கொஞ்சம் டூ மச் ஆகச் சென்றோம். இதனால் நாம் எதில் சிறந்தவர்களோ அதைக் கோட்டை விட்டோம். நம் அணியின் நம்பர் 1 வலு என்பது திறமைதான். எங்களுக்கு எதிராக பேட் செய்வதைக் கடினமாக்குவோம் பவுல் செய்வதை கடினமாக்குவோம். எங்களுக்கு எதிராக ஆடும் போது எதிரணியினருக்கு அசவுகரியமான ஒரு நிலையை உருவாக்குவோம். ஆனால் இவையெல்லாம் எங்கள் திறமைகள் மூலம்தான் செய்வோம்.
ஸ்லெட்ஜிங், எதிரணி வீரருடன் வார்த்தை விவகாரம் தனிப்பட்ட வீரரின் சுதந்திரத்துக்கு விட்டுவிட்டோம். சில வீரர்கள் இதனை விரும்புகின்றனர். பிறருக்கு இது ஒரு மேட்டரே அல்ல. இந்திய அணியிலும் சில வீரர்கள் இருப்பதால் களத்தில் நிச்சயம் உஷ்ணம் அதிகம் இருக்கும்.
இப்போது எங்களுக்கு எது சரி எது தவறு என்பது தெரிந்துள்ளது. ஆனால் எது செய்தாலும் அளவுக்கதிகமாகப் போகாது. தேவைப்படும் போதுதான் அதுவும், ஆனால் முக்கியமானது சிறந்த கிரிக்கெட்டைத் திறமையுடன் ஆடுவதில்தான்.
என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார் டிம் பெய்ன்,