சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை எங்களை விளையாட அனுமதியுங்கள் என ஜிம்பாப்வே அணியின் மூத்த வீரர் உருக்கமாக பேசியுள்ளார்.
அண்மையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் அரசியல் குறுக்கீடு ஏற்பட்டதால், உடனடி நடவடிக்கையின் அடிப்படையில் ஐசிசி உறுப்பினர்களில் இருந்து ஜிம்பாப்வே நீக்கப்பட்டது.
ஐசிசியின் விதிமுறையை மீறியதால், ஜிம்பாப்வே அணிக்கு எந்த ஒரு நன்கொடையும் இனி வழங்கப்படமாட்டாது. அதேபோல, ஐசிசி உடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து என்பதும் தெரிவிக்கப்பட்டது.
ஐசிசி நடத்தும் தொடர்களில் ஜிம்பாப்வே அணி பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் தொடர்களில் ஜிம்பாப்வே அணி தாராளமாக பங்கேற்கலாம் என்பதையும் ஐசிசி தெரிவித்தது.
இதன் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அதேபோல் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இவை முடிந்தவுடன் ஜனவரி மாதம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட ஜிம்பாப்வே இந்தியாவிற்கு வர இருக்கிறது.
ஐசிசி இடம் நன்கொடை பெற்றுக் கொண்டிருக்கும்போதே, வீரர்களுக்கு ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தால் இரண்டு மாத சம்பளம் நிலுவையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஐசிசியின் அனைத்து நன்கொடையும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இனி சம்பளம் இல்லாமல் தான் ஆட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அணியின் மூத்த வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் அண்மையில், “அயர்லாந்து, நெதர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் நாங்கள் ஆடினோம். அதற்கு இப்போது வரை எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இனியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், “சம்பளம் கூட வேண்டாம், எங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்” என்று வருத்தத்துடன் கேட்டுக் கொண்டுள்ளார்.