இந்த வருட ஐபிஎல் கோப்பையை ரசிகர்களுக்காக நிச்சயம் வென்றே ஆகவேண்டும் என ஆதங்கமாக பேசியுள்ளார் ஆர்சிபி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்.
ஐபிஎல் தொடரை பொறுத்தவரை சிறந்த அணிகளாக சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகள் பார்க்கப்படுகிறது. பின் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகள் தங்களது பங்கிற்கு குறைந்தபட்சம் இரண்டு முறையாவது ஐபிஎல் கோப்பையை வென்று இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக பலம்மிக்க அணியாக பார்க்கப்படும் பெங்களூரு அணி இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
இந்த வருத்தம் ரசிகர்கள் மத்தியில் 12 சீசன்களாக இருந்து வருகிறது. இந்தாண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வெல்வதற்கு பெங்களூரு அணி பல விதிகளை வகுத்து வருகிறது. குறிப்பாக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பேலன்ஸ் அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் திட்டங்கள் வகுத்து செயல்படுவதில் அணியின் பயிற்சியாளர் மைக் ஹசன் சிறப்பானவர் என்பதால், பெங்களூரு அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது.
இந்த வருடம் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பெங்களூரு அணி கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரை ரசிகர்களுக்காக கட்டாயம் வென்றே ஆகவேண்டும் என ஆதங்கமாக பேசியிருக்கிறார் பெங்களூரு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். இவர் கூறுகையில், “பெங்களூரு அணி பலம்மிக்க அணியாக இருந்தாலும், இதுவரை கோப்பையை வெல்லவில்லை என்ற வருத்தம் வீரர்களை விட ரசிகர்களுக்கு அதிகமாக இருந்து வருகிறது. இத்தனை வருடங்களாக அணி நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துக்கொண்டிருப்பது மிகப் பெரிய விஷயம். அதேபோல் ரசிகர்களும் எல்லா சூழல்களிலும் பக்கபலமாக இருக்கிறார்கள்.
அந்தக் காரணத்திற்காகவே இந்த வருடத்தின் ஐபிஎல் தொடரை வென்று அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்க வேண்டும். அதற்காக அணியில் உள்ள அனைவரும் தயாராகி வருகிறோம். எவ்வித அழுத்தமும் நாங்கள் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. சரியான சமயத்தில் வெற்றி பெற்று அதை நிரூபித்துக் காட்ட காத்திருக்கிறோம்.” என பேட்டியளித்தார்.