நியூஸிலாந்து பவர்பிளேயில், 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் பாண்டியா 2 விக்கெட் எடுத்தாலும் 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து இந்திய அணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தினார்.
இந்திய அணி 3-வது ஓவரில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை 1 ரன்களில் இழந்தது. அடுத்ததாக ரிஷப் பந்த் களமிறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ஷிகர் தவன், இன்றும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 2-வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் எடுத்தார்.
ஃபெர்குசன் பந்தில் ஒரு சிக்ஸரும் அடித்து ஒரு நீண்ட இன்னிங்ஸுக்குத் தயாரான நிலையில் 6-வது ஓவரில் ஃபெர்குசன் பந்தில் 29 ரன்களுடன் போல்ட் ஆகி வெளியேறினார். விஜய் சங்கர் 5-வது ஓவரில் ஒரு சிக்ஸரும் இரு பவுண்டரிகளும் அடித்து தன்னை 3-வதாகக் களமிறக்கியதற்கு நியாயம் செய்தார். இந்திய அணி பவர்பிளே முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.
மிகப்பெரிய ஸ்கோரை விரட்ட வேண்டும் என்பதால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் ஒருவித அழுத்தத்துக்கு ஆளானார்கள். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விரட்டவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 10 பந்துகள் வரை எதிர்கொண்டும் ரிஷப் பந்தால் ஒரு பவுண்டரியும் அடிக்கமுடியாமல் போனது. அவர் 4 ரன்களில் சாண்ட்னர் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்திய பேட்ஸ்மேன்களில் நம்பிக்கையுடன் விளையாடி 18 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்த விஜய் சங்கர், பந்த் ஆட்டமிழந்த அடுத்த 2-வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று 27 ரன்களில் வெளியேறினார். இதேபோல சிக்ஸர் அடிக்க முயன்று பலனளிக்காமல் தினேஷ் கார்த்திக் 5 ரன்களிலும் பாண்டியா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.
இந்திய அணி போலில்லாமல் நியூஸிலாந்து அணியின் ஃபீல்டிங் அற்புதமாக இருந்ததால் இந்திய அணியினரால் தப்பிக்கமுடியாமல் போனது. கடகவென இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணியின் தோல்வி ஆட்டத்தின் பாதியிலேயே உறுதியானது. எனினும் கடைசிக்கட்டத்தில் தோனியும் கிருனாள் பாண்டியாவும் ஓரளவு ரன்கள் சேர்த்தார்கள். அது, ரன்கள் அளவிலான தோல்வியின் வித்தியாசத்தைக் குறைப்பதற்கு மட்டுமே உதவியது. கிருனாள் பாண்டியா 20 ரன்களிலும் புவனேஸ்வர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார்கள். ஓரளவு தாக்குப்பிடித்த தோனி, 31 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியாக சாஹலும் 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி மறக்கக்கூடிய ஒரு டி20 ஆட்டம் முடிவுக்கு வந்தது.