பிளானோட வந்துருக்கோம்; நம்ம கேம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்…இரண்டு பேரும் அப்படி விளையாடி தான் வின் பண்ணி கொடுத்தார்கள் – வெற்றிக்கான காரணத்தை சொன்ன ரோகித் சர்மா!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இவர்கள் இருவரும் விளையாடிய விதம் தான் வெற்றிக்கு உதவியது என்று பேசியுள்ளார் ரோகித் சர்மா.

மொகாலியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் லீக் போட்டியில் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 72 ரன்கள் அடித்திருந்தது. மூன்றாவது விக்கெட்டும் விரைவாக பறிபோனது.

நான்காவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் இருவரும் 53 பந்துகளில் 119 ரன்கள் குவித்து புதிய வரலாறு படைத்தனர். இதன் மூலம் 20 ஓவர்களில் மூன்று விக்கட்டுகளை மட்டுமே இழந்து 214 ரன்கள் வரை எட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இந்த இமாலய இலக்கை துரத்த முடியுமா? என்கிற சந்தேகத்துடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். கிரீன் 23 ரன்களுக்கு வேகியேறினார்.

பின்னர் இஷான் கிஷன் 41 பந்துகளில் 75 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 66 ரன்களும் குவித்து மூன்றாவது விக்கெட்டிற்கு 116 ரன்கள் அடித்தனர். இதுதான் போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவர்கள் இருவரும் ஆட்டமிழந்தபிறகு, டிம் டேவிட்(19) மற்றும் திலக் வர்மா(26) இருவரும் ஆட்டமிழக்காமல் பினிஷ் செய்து மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

 

18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 216 ரன்கள் அடித்தது. இறுதியில் 6 விக்கெட்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. போட்டி முடிந்த பிறகு விருது வழங்கும் நிகழ்வில் பேசிய வெற்றி பெற்ற அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வெற்றிக்கான காரணம் என்னவென்று எடுத்துரைத்தார். ரோகித் சர்மா பேசியதாவது:

“ஆரம்பகால டி20 கிரிக்கெட்டில் 150 ரன்கள் அடித்தாலே அது வெற்றி பெறக்கூடிய ஸ்கோர். ஆனால் இந்த சீசனில் இதுவரை சராசரியாக அடிக்கப்பட்ட ஸ்கோர் 180 ரன்கள் என்பதை தெரிந்து கொண்டேன். அந்த அளவிற்கு டி20 கிரிக்கெட் பெரிதாக வளர்ந்திருக்கிறது.

இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும்பொழுது பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியம். சூரியகுமார் யாதவ் அபாரமாக விளையாடினார். ஸ்டம்புக்கு பின்னே தூக்கி அடிப்பது தான் அவரது பலம். அதை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் இன்று பேட்டிங் செய்த விதம் அசாத்தியமாக இருந்தது.

இந்த சீசன் துவங்குவதற்கு முன்னர் வீரர்களிடம் பேசியபோது, இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். களமிறங்கி உங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தும்பொழுது போட்டியில் வெற்றி தோல்வி மாறிமாறி வந்து செல்லலாம். அதைப்பற்றி கவலைப்படாமல் திட்டத்தில் தெளிவாக இருங்கள் என்று அறிவுறுத்தினேன்.

நாங்கள் சீசன் முழுவதும் தில்லுக்கு துட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். டெத் ஓவர்களில் சரிசெய்ய வேண்டியது இருக்கிறது. ஓரிரு ஓவர்கள் கட்டுப்படுத்தி பந்துவீச வேண்டும். தொடர்ந்து மூன்று போட்டிகளாக 200+ ரன்கள் கொடுத்து விட்டோம்.

அதேநேரம் 200+ ரன்களை சேஸ் செய்யும்பொழுது பிரஷர் இருக்கிறது. ஆனால் அந்த பிரஷர் தான் எங்களிடம் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருகிறது.” என்றும் பேசினார்.

Mohamed:

This website uses cookies.