நாங்களும் தவறுகள் செய்தோம்; உண்மையை ஒப்புக்கொண்ட ரஹானே
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்நிலையில் 2 வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், டாஸ் போடப்படாமல் முதல் நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இங்கிலாந்து அணி, டாஸ் வென்று முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில், 107 ரன்களுக்கு சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இது. இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் 5 விக்கெட்டையும் வோக்ஸ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். பிராட், சாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. குக்(21), ஜென்னிங்ஸ்(11), ரூட்(19), போப்(28), பட்லர் (24) என சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பேர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி மட்டும் நிலைத்து நின்று ஆடியதோடு, ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. அதனால், அதிகபட்சம் 200 ரன்களை எட்டும் என்று அப்போது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுழல் பந்துவீச்சு முற்றிலும் எடுபடாத நிலையில் பேர்ஸ்டோவ், வோக்ஸ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
பேர்ஸ்டோவ் 93 ரன்னில் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வோக்ஸ் அபார சதமடித்தார். இது அவருக்கு முதலாவது டெஸ்ட் சதம். இங்கிலாந்து அணி 81 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் மூன்றாம் நாள் போட்டி முடிவுக்கு வந்தது. வோக்ஸ் 120 ரன்களுடனும் சாம் குர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணி 250 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே, 107 ரன்களுக்குள் சுருண்டது பற்றி கூறும்போது, இங்கிலாந்து போன்ற நாடுகளில் விளையாடும்போது எப்போதும் சவால்களை எதிர்கொள்கிறோம். ஆனாலும் பேட்ஸ்மேன்கள் தங்கள் திறமையை காட்ட வேண்டும். ரன்கள் குவிப்பது மட்டும் திறமையல்ல. தவறான பந்துகளை அடிக்காமல் இருப்பதிலும் தடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்படுவதும் முக்கியம். லார்ட்ஸ் போட்டியில் நாங்கள் தவறு செய்தோம். அதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும். அதை ஏற்றுக்கொண்டு அதில் இருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும். தவறுகளில் இருந்து அனைவரும் விரைவாக பாடம் கற்றுக்கொண்டு அதை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆண்டர்சன் சிறந்த வீரர். அவர் சரியான லென்த்தில் பந்துவீசினார். ஒரே மாதிரி தொடர்ந்து வீசி, ரன் எடுக்க விடாமல் தடுத்து 5 விக்கெட்டை வீழ்த்தினார்’ என்றார்.