நியூஸிலாந்தில் நடைபெறும் யு-19 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய இளம் வீரர்களிடம் பாக். இளம் வீரர்கள் 203 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தனது பார்வைகளை வெளியிட்டுள்ளார்.
இளம் இந்திய வீரர்களை வளர்த்தெடுப்பதில் ராகுல் திராவிடின் பங்கை விதந்தோதிய ரமீஸ் ராஜா, பாகிஸ்தானுக்கும் திராவிட் போல் ஒரு பயிற்சியாளர் தேவை என்பதை வலியுறுத்தினார். தோல்வியின் இடைவெளி அதிர்ச்சிகரமாக உள்ளது என்றார் ரமீஸ் ராஜா.
“இந்திய வீரர்களில் சிலர் காட்டிய பொறுமை என்னைக் கவர்ந்தது. ஷுப்மன் கில் என்ற புதிய திறமை வெளிவந்துள்ளது. இவர்களை தயார்படுத்தி வளர்த்தெடுத்த ராகுல் திராவிடுக்கு நிறைய பெருமைகள் சேர வேண்டும்.
ராகுல் திராவிடிடமிருந்து கிரிக்கெட் மட்டுமல்ல நிறைய விஷயங்களை அவர்கள் கற்றுக் கொள்கின்றனர். எப்படி தங்களை நடத்திக் கொள்வது, ஆட்டம், சூழல் பற்றிய உணர்வு என்று ராகுல் திராவிட் அற்புதமாகத் திகழ்கிறார்.
எங்கள் வீரர்கள் பேட் செய்தது, பீல்ட் செய்தது பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை. பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் திறமைகளை அமைப்பு ரீதியாக மாற்ற வேண்டியுள்ளது. இளையோர் கிரிக்கெட்டில் வாரியம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்தியா எப்படி ராகுல் திராவிடுக்கு இந்த வாய்ப்பை வழங்கி பயனடைந்ததோ அப்படி பாகிஸ்தானுக்கு ஒருவர் தேவைப்படுகிறார்” இவ்வாறு கூறினார் ரமீஸ் ராஜா.