இந்திய அணியை வெறுப்பேற்றுவதே எங்கள் நோக்கம்; டி ஆர்கி ஷார்ட் !!

இந்திய அணியை வெறுப்பேற்றுவதே எங்கள் நோக்கம்; டி ஆர்கி ஷார்ட்

சிட்னியில் நடைபெற்று வரும் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்திய பந்து வீச்சு பல்லிளிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் 6 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து முன்னிலையை நோக்கிச் செல்கிறது.

நாளை கடைசி நாள், முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்திய வீரர்கள் குறிப்பாக முரளி விஜய், ராகுல் மீண்டும் விரைவில் களமிறங்கி பேட்டிங் பயிற்சி எடுத்துக் கொள்ள விழைவார்கள். ஆனால் 356/6 என்று உள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியில் ஹாரி நீல்சன் 56, ஹார்டி 69 ஆகிய இருவரும் 122 ரன்கள் கூட்டணியுடன் இந்தியப் பந்து வீச்சுக்குத் தண்ணிகாட்டி வருகின்றனர்.

ஆகவே நாளை விரைவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை சுருட்டி மீண்டும் பேட்டிங் பயிற்சி எடுக்க இந்திய அணி தீவிரமாக உள்ள நிலையில் இன்று இந்திய வேகப்பந்து கூட்டணியான ஷமி, இஷாந்த், உமேஷ் யாதவ் ஆகியோரை தன் அதிரடி பேட்டிங் மூலம் பதம் பார்த்த டி ஆர்க்கி ஷார்ட், ‘இந்திய அணிக்கு 2வது பேட்டிங் வாய்ப்பை அவ்வளவு சுலபமாக கொடுத்து விட மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.

அவர் இன்றைய ஆட்டம் முடிந்தவுடன் தெரிவித்த போது, “நாளை நாங்கள் கூடியமட்டும் அதிக நேரம் பேட் செய்வோம். இந்திய வீரர்களை இன்னும் கூடுதலாக களத்தில் நிற்கச் செய்து வெறுப்பேற்றுவோம். நிச்சயமாக டிக்ளேர் செய்யப்போவதில்லை. இந்திய அணியை கூடியவரையில் களத்தில் நிற்க வைத்து எங்களை ஆல் அவுட் செய்யுமாறு வலியுறுத்துவோம், டிக்ளேர் இல்லை.

நிச்சயம் நாளை பேட் செய்ய இந்திய அணி ஆவலாக இருக்கும்.  இது பயிற்சி ஆட்டம், முதல் தர கிரிக்கெட் அல்ல. திரைக்குப் பின்னால் நிறைய நடந்து கொண்டிருக்கிறது, எங்களைப் பொறுத்தவரை கூடிய மட்டும் ஆல் அவுட் ஆகும் வரை பேட் செய்வோம். அணியின் பேட்டிங் ஆழம் என்பதை இந்திய அணி பார்க்கட்டும்.” என்றார்.

 

Mohamed:

This website uses cookies.