பிட்ச் எப்படி இருக்கப்போகிறது, யாரைப் பயன்படுத்துவது சரியாக இருக்குமென்றே திட்டமில்லாமல் தான் வந்தேன். ஆனால் இந்த வெற்றி சாத்தியமானது இவர் ஒருவரால் தான் என்று பேசியுள்ளார் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி கேப்டன் கேஎல் ராகுல்.
லக்னோவில் நடந்த 2023 ஐபிஎல்-இன் 3ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். கேஎல் ராகுல் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு, கேஎல் ராகுல் 8 ரன்களுக்கு அவுட்டான பிறகு, முதலில் தடுமாறிய கைல் மேயர்ஸ் பின்னர் அதிரடியாக ஆடத்துவங்கி 73 ரன்கள் அடித்தார். நிக்கோலஸ் பூரன் 36 ரன்கள், பதோனி 19 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி.
இலக்கை சேஸ் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் ப்ரிதிவி ஷா(12), மிட்ச்சல் மார்ஷ்(0), சர்ப்ராஸ் கான்(4) ஆகியோரின் விக்கெட்டை மார்க் வுட் தூக்கினார்.
அதிரடியாக விளையாடி வந்த ருசோவ் 30(20) ரன்களும், ரோவ்மன் பவல் 1 ரன்னிலும் அவுட்டாகினர். அரைசதம் அடித்து போராடிவந்த வார்னர் 56(48) ரன்களுக்கு வெளியேற, டெல்லி அணி தோல்வியை நோக்கி சென்றது.
20ஆவது ஓவரில் மேலும் 2 விக்கெட்டுகளை எடுத்து 14 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார் மார்க் வுட். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி அணி. இறுதியில் லக்னோ 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டி முடிந்தபின், வெற்றிபெற லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசியபோது கூறியதாவது:
“ஐபிஎல் தொடரில் இது எங்களுக்கு நல்ல துவக்கம். முதலில் பிட்ச் எப்படி இருக்கப்போகிறது என்கிற குழப்பத்தில் வந்தேன். இந்த வெற்றியின் மூலம் நம்பிக்கை கிடைத்தது.
டாஸ் ஜெயிப்பது நம் கையில் இல்லையென்றாலும், புதிய விதிகள் நமக்கேற்ற வீரர்களை எடுக்க உதவுகிறது. பேட்டிங் பவுலிங் இரண்டிலும் ஆழமாக செயல்பட வழிவகுக்கிறது.
இன்றைய போட்டியில் 30 ரன்கள் அதிகமாக அடித்தோம் என்று உணர்ந்தேன். கைல் மேயர்ஸ் ஆக்ரோஷமாக ஆடினார். எதிரணி ஸ்பின்னர்களுக்கு அழுத்தம் கொடுத்தார்.
டெல்லி அணிக்கு சிறப்பான துவக்கமும் கிடைத்தது. நடுவில் பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு ஆட்டத்தை எங்கள் பக்கம் கொண்டுவந்தார்கள். இது மார்க் வுட் நாள். எந்தவொரு வேகப்பந்து வீச்சாளருக்கும் இது கனவு. அணிக்கும் இது கனவு தான். நல்ல ஆரம்பமாக எடுத்துக்கொண்டு சீசன் முழுவதும் செயல்படுவார் என நம்புகிறேன். ஒட்டுமொத்தமாக பவுலர்கள் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்கள்.
டி20 போட்டியில் எப்போது என்னவெண்டுமானாலும் நடக்கலாம். ஒவ்வொரு நாளும் போராட வேண்டும். முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதால் இந்த வெற்றியை எளிதாக எடுத்துக்கொண்டு, அடுத்த போட்டிக்கு என்ன செய்யவேண்டும் என்பதை பார்க்க தயராவோம்.” என்றார் கேஎல் ராகுல்.