வலிமையான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி, கடந்த ஆண்டு நியூஸிக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியது ஆகியவை மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. பெங்களூருவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.
அடுத்ததாக வரும் 24-ம் தேதி முதல் நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி முழுமையான தொடரில் விளையாட உள்ளது. 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இந்திய அணி விளையாட உள்ளது. இதற்காக நியூஸிலாந்துக்கு இந்திய அணி இன்று இரவு புறப்படுகிறது.
கடந்த ஆண்டு நியூஸிலாந்து பயணத்தில் டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி, ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
”கடந்த ஆண்டு நியூஸிலாந்தில் நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. நாங்கள் விளையாடிய விதம் பல்வேறு சாதகமான அம்சங்களை எங்களுக்கு ஏற்படுத்தியது. அதேபோன்று இந்த முறையும் பயணம் அமையும். கடந்த முறையைப் போலவே எங்களின் முதல் பந்தில் இருந்து நியூஸிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுப்போம், மகிழ்ச்சியுடன் விளையாடுவோம்
உள்நாட்டில் தொடரை வெல்வது எப்போதும் ஒருவிதமான மகிழ்ச்சிதான். உங்களின் முதல்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, எதிரணிக்கு நிச்சயம் அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். கடந்த ஆண்டில் இதைத்தான் நாங்கள் செய்தோம், நடுப்பகுதி ஓவர்களில் அழுத்தம் கொடுத்தும், விக்கெட்டுகளை வீழ்த்தினோம், சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பங்களிப்பு செய்தார்கள். இதேபோன்ற விளையாட்டை நியூஸிலாந்திலும் விளையாடுவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.