ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பெரிய இலக்குகளை விரட்டியும், பெரிய இலக்குகளை நிர்ணயித்தும் பவர் மே.இ.தீவுகள் டாப் அணிகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த அணியிடம் தடையற்ற ஒரு மனப்போக்கு உள்ளதே இதற்குக் காரணம்.
வருடம் முச்சூடும் 4ம் நிலையில் யார்? 5ம் நிலையில் தோனி சரிப்படுவாரா? பவுலிங் சேர்க்கை, பேட்டின் சேர்க்கை, அணிச்சேர்க்கை, செயல்முறை என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கும் அணிக்கு இத்தகைய தடையற்ற மனப்போக்கு இல்லை, இருக்கவும் வாய்ப்பில்லை.
மே.இ.தீவுகள் நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக 421 ரன்களை விளாசியது, கிறிஸ் கெய்ல் 22 பந்துகளில் 36 ரன்களை எடுக்க, ஷேய் ஹோப் 86 பந்துகளில் சதம் அடித்தார், ஹோல்டர் (47), ஆந்த்ரே ரஸல் (54) ஆகியோர் இணைந்து 39 பந்துகளில் 82 ரன்கள் விளாசினர்.
இதனையடுத்து இந்த உலகக்கோப்பையில் நிச்சயம் 500 ரன்கள் என்ற மைல்கல்லை ஏதாவது ஒரு அணி எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மே.இ.தீவுகள் சத நாயகன் ஷேய் ஹோப் கூறியதாவது:
“நிச்சயமாக 500 ரன்கள் எங்கள் லட்சியம் ஏதாவது ஒரு தருணத்தில் இதைச் சாதிப்போம். 500 ரன்கள் மைல்கல்லை எட்டும் முதல் அணி என்பது நிச்சயமாக பெரிய விஷயமே. எங்களிடம் நிச்சயமாக அந்த மைல்கல்லை எட்டும் பேட்டிங் பவர் இருக்கிறது.
ஆந்த்ரே ரஸல் நிச்சயம் ஒப்பிட முடியாதவர். அவரைப்பற்றி எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் அடிக்கிறார், அடிக்கிறார் என்றால் அது சிக்ஸ். அவருடன் இணைந்து ஆடுவது மகிழ்ச்சி தரும் அனுபவமாகும்.
களத்தில் அவருக்கு எப்படி வீசுவது என்று எதிரணிகள் திணறும்போது எங்களுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாகவே இருக்கும்.
இவ்வாறு கூறினார் ஷேய் ஹோப்.
தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் பிளெண்டல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். பிளெண்டல் 106 ரன்னும், கேன் வில்லியம்சன் 85 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நியூசிலாந்து அணி 47.2 ஓவரில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.