ரயில்வே துறையிலிருந்து கடந்த 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை,” என, ஹர்மன்பிரீத் தெரிவித்தார்.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி துணைக்கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 28. இதுவரை 78 ஒரு நாள் (2025 ரன்), 2 டெஸ்ட் (26) 68 ‘டுவென்டி-20’ போட்டியில் விளையாடி உள்ளார். ‘ஆல்-ரவுண்டரான’ இவர் பந்தை சுழற்றவும் செய்வார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி பைனலுக்கு (9 போட்டி, 359 ரன்) முன்னேற கைகொடுத்தார்.
இதை கவுரவிக்கும்விதமாக, பஞ்சாப் அரசு ஹர்மன்பிரீத்திற்கு காவல்துறையில், டி.எஸ்.பி., பணி வழங்கியது. ஏற்கனவே, விளையாட்டுத்துறை பிரிவில் மேற்கு ரயில்வேயில் அலுவலக கண்காணிப்பாளராக இருக்கிறார். இவரின் பணிக்கான ஒப்பந்தப்படி, 5 ஆண்டு முடிந்தால்தான் மற்றொரு பணியில் சேர முடியும். அதற்குள் விலகினால் வைப்புத்தொகையை செலுத்த வேண்டும். இதனால், ஹர்மன்பிரீத் டி.எஸ்.பி., பணியில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 மாதமாக இவருக்கு சம்பளமும் ரயில்வே துறை வழங்கவில்லை எனத்தெரிகிறது.
27 லட்சம்:
இது குறித்து ஹர்மன்பிரீத் கூறுகையில்,” கடந்த மூன்று ஆண்டாக மேற்கு ரயில்வேயில் பணிபுரிகிறேன். தற்போது, பஞ்சாப் அரசு தந்த பணியில் இணையும் எண்ணத்தில் உள்ளேன். இதிலிருந்து விலகினால், 5 ஆண்டிற்கான சம்பளத்தொகையான ரூ. 27 லட்சத்தை செலுத்த வற்புறுத்துகின்றனர். அப்படி செய்தால் மட்டுமே, ரயில்வே தரப்பிலிருந்து விலகுவதற்கான முறையான அனுமதி கடிதம் வழங்கப்படும் என கூறுகின்றனர். இக்கடிதம் இல்லை எனில் டி.எஸ்.பி., பணியில் இணைய முடியாது. கடந்த 5 மாதமாக சம்பளமும் அளிக்கவில்லை. பணி இல்லாமல் தவிக்கிறேன்,” என்றார்.
என்ன காரணம்: ரயில்வே அணி செயலர் ரேகா யாதவ் கூறுகையில்,” ஹர்மன்பீரித்திற்கு இதை விட நல்ல பணி கிடைத்தால், தாராளமாக செல்லலாம். அதே நேரம், ஒப்பந்தப்படி 5 ஆண்டு பணி புரிய வேண்டும். இவர் மூன்று ஆண்டு பணியாற்றி விட்டார். ஹர்மன்பிரீத் நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் என்பதால், மீதமுள்ள காலத்திற்கான (2 ஆண்டு) வைப்புத்தொகையை மட்டும் செலுத்தினால் போதும். உலக கோப்பைக்குப்பின், ஹர்மன்பிரீத் ஆஸ்திரேலியாவில் நடக்கும் ‘பிக் பாஷ்’ தொடரில் பங்கேற்று வருகிறார். இத்தொடர் தனிப்பட்ட நலன் சார்ந்தது என்பதால், விடுமுறை எடுக்க முடியாது. இதனால், சிறப்பு அனுமதியுடன் விளையாடி வருகிறார். இந்த காரணத்தால் 5 மாதமாக இவருக்கு சம்பளம் தரவில்லை,” என்றார்.
ஆப்ரிக்காவில் அசத்துவோம்
தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் பிப். 5ல் கிம்பர்லியில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கு முன், இந்திய பெண்கள் அணி, பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.
இதுகுறித்து இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், ”தென் ஆப்ரிக்காவுக்கு முன்னதாகவே செல்ல இருப்பது, அங்குள்ள தட்பவெப்பநிலை, ஆடுகளத்தின் தன்மையை அறிந்து கொள்ள உதவும். தவிர, பயிற்சி போட்டியில் விளையாட இருப்பது போட்டியில் சிறப்பாக செயல்பட கூடுதல் பலமாக அமையும். இம்முறை தென் ஆப்ரிக்க மண்ணில் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது,” என்றார்.