சிஎஸ்கே தங்களது வீரர்களை நம்புவது போல இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களது வீரர்களை நம்புகிறது. இது வழக்கமான மும்பை இந்தியன்ஸ் அணுகுமுறை இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல்.
மும்பை இந்தியன்ஸ் அணி இந்த வருட ஐபிஎல் தொடரை இரண்டு தோல்விகளுடன் துவங்கியது. அதற்கு அடுத்த சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் மீண்டும் பார்மிற்கு வந்ததால் தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றது.
தற்போது 11 போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கும் முன்னேறி உள்ளது. இன்னும் மூன்று லீக் போட்டிகள் மீதம் இருக்கின்றன. அதில் இரண்டு வெற்றிகளை பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேமரூன் கிரீன் மற்றும் சூரியகுமார் யாதவ், நேஹால் வதேரா, திலக் வர்மா போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரிலும் டிம் டேவிட் பினிஷிங் ரோலிலும் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்து வருகிறார்.
தற்போது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கவலைக்குரியதாக இருப்பது ரோகித் சர்மாவின் சமீபத்திய ஃபார்ம். அவர் கடைசி ஐந்து போட்டிகளில் 12 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இந்த சீசனில் 11 போட்டிகளில் 191 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இவரது சராசரி 14க்கும் குறைவாக இருக்கிறது.
இவ்வளவு மோசமாக துவக்கம் கொடுத்து வரும் ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அணுகும் விதம், சிஎஸ்கே அணி தங்களது வீரர்களை எப்படி பார்த்துக் கொள்வார்களோ அதுபோன்று இருக்கிறது. இது வழக்கமான மும்பை இந்தியன்ஸ் அணுகுமுறையாக தெரியவில்லை. இந்த சீசனில் சிஎஸ்கேவின் பாணியை கடைப்பிடிக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டவுல்.
“அணியின் கேப்டன் மற்றும் முக்கியமான துவக்க வீரராக இருக்கும் ரோகித் சர்மா செயல்படாத போதும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. அணி நிர்வாகமும் அவரை நம்பி தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. கடந்த காலங்களில் சிஎஸ்கே அணி வாட்சன் மீது நம்பிக்கை வைத்தது. அவர் ஐபிஎல் பைனலில் அதற்கு பதில் கொடுத்தார். இப்படியான அணுகுமுறையை இந்த சீசன் மும்பை இந்தியன்ஸ் அணி கடைபிடிக்கிறது. இது நல்ல அணுகுமுறையாகவே தெரிகிறது.
நேஹால் வதேரா, திலக் வர்மாவிற்கு பதிலாக விளையாடி வருகிறார். கொடுக்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளிலும் அரைசதம் அடித்திருக்கிறார். ஒருவேளை திலக் வருமா தனது உடல்நிலையில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்கு வந்துவிட்டால் ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மா வெளியில் அமர்ந்து கொள்வாரா? அப்போதும் அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை நம்புமா? ஏனெனில் திலக் வர்மா மிடில் ஆர்டரில் மிகுந்த நம்பிக்கையை கொடுத்து வருகிறார். அவரைப்போன்ற இளம் வீரரை வெளியில் அமர்த்துவது அவரது நம்பிக்கையையும் சீர்குலைக்கும். இந்த விஷயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி கையாளும்? இதற்கு ரோகித் சர்மா தான் பதில் கூறவேண்டும்.”என்றும் பேசினார்.