யுவராஜ் சிங் சொன்னது சரியே, இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக உள்ளது என ஒப்புக்கொண்டுள்ளார் கேப்டன் விராட்கோலி.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி ஆடி வருகிறது. முதல் டி20 போட்டியை இந்திய அணி அபாரமாக சேஸ் செய்து வென்றபோதிலும், இந்திய அணியின் பீல்டிங் சற்று கவனத்திற்குரிய ஒன்றாக இருந்தது.
இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கூறுகையில், “இந்தியா 2020 டி20 உலகக்கோப்பையை வெல்லும் எண்ணத்தில் இருக்கிறது என்றால், விரைவில் பீல்டிங் குறைகளை விரைவில் சரிசெய்தாக வேண்டும். சிறிய தவறுதான் உலகத்தரம் வாய்ந்த அணிக்கும் சிறிய அணிக்கும் உள்ள வித்தியாசம்” என்றார்.
இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக பீல்டிங் தவறுகள் பார்க்கப்படுகிறது. யுவராஜ் சிங் கூறியது போலவே நடந்துவிட்டது. அவர் கூறியது முற்றிலும் உண்மை, இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருக்கிறது என ஒப்புக்கொண்டுள்ளார் கேப்டன் விராட்.
இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பேசியபோது,
“இதுபோல மோசமாக ஃபீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் போதாது. கடந்த இரு டி20 ஆட்டங்களிலும் ஃபீல்டிங்கின் தரம் சரியில்லை. பந்துவீச்சு நன்றாக உள்ளது. முதல் நான்கு ஓவர்களில் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தைக் கொடுத்தோம். பிறகு ஒரு ஓவரில் இரு கேட்சுகளை நழுவவிடும்போது அது வெற்றியைப் பாதிக்கும்.
ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை மே.இ. தீவுகள் அணி இழந்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஃபீல்டிங்கில் கேட்சுகளை நழுவவிடுவது குறித்துக் கவலைப்படாமல் துணிச்சலுடன் செயல்பட வேண்டும்” என்றார்.