ஒரு கேப்டன் சக வீரர்களிடம் ஆலோசனை கேட்பதைப் பார்க்கிறோம், ஓய்வறையிலிருந்து பயிற்சியாளர் சொல்லி விடுவதைப் பார்த்திருக்கிறோம், ஆனால் ஒரு கேப்டன், அதுவும் ஆஸ்திரேலிய கேப்டன் ஒருவர் விராட் கோலி-ரோஹித் சர்மா கூட்டணியை உடைக்க ஒரு போட்டியின் போது இங்கிலாந்து நடுவர் மைக்கேல் காஃபிடம் ஆலோசனை கேட்டாராம்.
ஒரு நாள் போட்டி ஒன்றில் விராட் கோலி 89 ரன்களையும் ரோஹித் சர்மா 119 ரன்களையும் எடுக்க கூட்டணியாக 137 ரன்களைச் சேர்த்தனர்.
இருவரையும் எப்படி வீழ்த்துவது என்று அந்தப் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய மைக்கேல் காஃபிடம் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி கேப்டன் ஏரோன் பிஞ்ச் அறிவுரை கேட்டார். அதற்கு அவர், ‘நீங்கள்தான் கேப்டன் நீங்கள்தான் யோசிக்க வேண்டும்’ என்று கூறியதை தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.
“இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்த ஒருநாள் போட்டி ஒன்றில் ரோஹித் சர்மா, விராட் கோலி பெரிய ரன் கூட்டணியில் இருந்தனர்.
நான் அப்போது ஸ்கொயர் லெக் அம்பயர் நிலையில் கேப்டன் ஏரோன் பிஞ்ச் அருகே நின்று கொண்டிருந்தேன். இந்த 2 கிரேட் பிளேயர்கள் ஆடுவதை பார்க்க நம்பவே முடியவில்லை, ஆச்சரியம் என்றார். பிறகு என்னிடம் எப்படி இவர்களுக்கு வீசுவது என்று என்னிடம் கேட்டார்.
Photo by Deepak Malik / SPORTZPICS for BCCI
ஆனால் நான் என் தட்டில் நிறைய உள்ளது, உங்கள் தட்டைக் கவனியுங்கள் என்று நீங்கள்தான் திட்டமிட வேண்டும், உங்கள் கையில்தான் இருக்கிறது என்று கூறினேன்” என்று இப்போது விஸ்டன் கிரிக்கெட்டுக்காக மைக்கேல் காஃப் தெரிவித்துள்ளார்.
இவர் கூறும் இந்தப் போட்டி பெங்களூருவில் நடந்தது போல் தெரிகிறது. 286 ரன்கள் இலக்கை இந்திய அணி அனாயசமாக விரட்டி தொடரை 2-1 என்று கைப்பற்றியது. ஒரு வீரராக நடுவர் மைக்கேல் காஃப் டுர்ஹாம் அணிக்காக 67 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். இவர் ஒரு ஆஃப் ஸ்பின்னர்.