தோனி என்னை ஓபனிங் இறங்க சொன்ன உடனே என் வாழ்க்கை மாறிடுச்சுன்னு சொல்லாதீங்க… அதுக்காக நான் என்னென்ன பண்ணேன்னு தெரியுமா? – ரோகித் சர்மா காட்டம்!

என்னை ஓபனிங் இறங்கச் சொல்லி அழைத்தவுடன், அனைத்தும் மாறிவிடவில்லை. அதற்காக நான் கடினமாக உழைத்தேன் என்று தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ரோகித் சர்மா.

சமகாலத்தில் தலைசிறந்த வெள்ளைப்பந்து பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்து வருபவர் கேப்டன் ரோகித் சர்மா. குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து நம்பர் ஒன் வீரராகவும் இருந்திருக்கிறார்.

ஆரம்ப கட்டத்தில் இந்திய அணிக்கு வந்தபோது சுழல்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் கொண்ட ஆல்ரவுண்டராகவே விளையாடினார். ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் களமிறங்கி தொடர்ந்து சொதப்பி வந்ததால், பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். ஆனாலும் அப்போதைய கேப்டன் தோனி, இவர் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் தோனி, ரோகித் சர்மாவின் பேட்டிங்கை கவனித்து, ஓபனிங் இறங்க வைத்தார்.

அதன் பிறகு இவரது ஒருநாள் கெரியர் உச்சத்தை பெற்றது என்பது வரலாறு. புள்ளிவிவரங்களை பார்க்கையில், ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில், இந்திய அணிக்காக இதுவரை  235 இன்னிங்ஸ்கள் விளையாடி இருக்கிறார். அதில் 155 இன்னிங்ஸ்கள் ஓபனிங் செய்திருக்கிறார். 30 சதங்கள் 48 அரைசதங்கள் உட்பட, மொத்தம் 9,795 ரன்கள் ஒருநாள் போட்டிகளில் அடித்திருக்கிறார். அதில் 28 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் என 7,777 ரன்கள் ஓபனிங் இறங்கி அடித்தவை.

ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது, டி20 போட்டிகளிலும் 90 சதவீத ரன்கள் ஓப்பனிங் இறங்கி அடித்தவை. டெஸ்ட் போட்டிகளிலும் ஓபனிங் இறங்க வைத்த பிறகே இவருக்கு சதங்கள் வந்தன.

அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி ரோகித் சர்மாவை ஓப்பனிங் இறங்க வைத்தது தான் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது என்று பேச்சுக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில் ரோகித் சர்மா தனது சமீபத்திய பேட்டியில் ஓப்பனிங் குறித்தும், அது குறித்து வரும் கருத்துக்கள் பற்றியும் பேசியுள்ளார்.

“2013ஆம் ஆண்டு என்னை ஓப்பனிங் பேட்டிங் இறங்குவதற்கு அழைத்தார்கள். அழைத்த உடனேயே, வெறுமனே ஓபனிங் இறங்கிவிடவில்லை. அதற்கு சில நாட்கள் முன்பு தொடர்ச்சியாக ஓப்பனிங் இறங்கிய ஜாம்பவான்கள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? மற்றும் பவர்-பிளே ஓவர்களில் என்னென்ன செய்ய வேண்டும்? செய்யக்கூடாது? என்று வீடியோக்களை வைத்து பல ஆய்வுகள் செய்த பிறகே களம் இறங்கினேன். வெறுமனே ஓப்பனிங் இறங்கியிருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். பல ஆய்வுகளை செய்த பிறகே என்னால் இவ்வளவு வெற்றிகரமாக இருக்க முடிந்திருக்கிறது. என்னுடைய உழைப்பு நிறைய இருக்கிறது.” என்று திட்டவட்டமாக ரோஹித் சர்மா கூறினார்.

Mohamed:

This website uses cookies.