விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பிவிட்டால், நிச்சயம் இவரை மாற்றிவிட வேண்டும் என்று ஜாம்பவான் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
2வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி காயம் காரணமாக வெளியில் அமர்ந்து இருந்தார். அவருக்கு பதிலாக ஹனுமா விஹாரி உள்ளே எடுத்து வரப்பட்டார். மேலும் துணை கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் தற்காலிக கேப்டனாக அணியை வழி நடத்தினார். வேறு எந்தவித மாற்றமும் அணியில் செய்யப்படவில்லை.
முதல் டெஸ்ட் போட்டியில் இருந்த அதே வீரர்களே மீண்டும் இடம் பிடித்திருந்தனர். 2வது டெஸ்ட் போட்டியின் போது, சிராஜ் தொடை பகுதியில் ஏற்பட்ட சிறு தசைபிடிப்பு காரணமாக பந்துவீச சிரமப்பட்டார். முதல் இன்னிங்சில் 10 ஓவர்களுக்கும் குறைவாகவே வீசினார். இரண்டாவது இன்னிங்சில் அதற்கும் குறைவான ஓவர்களே வீசினார். தனது பந்துவீச்சில் பெரிய பாதிப்பு ஒன்றையும் அவர் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி உள்ளே வந்துவிட்டால், யாரை மாற்ற வேண்டும்? மற்றும் சிராஜ் மூன்றாவது போட்டியில் இடம்பெற வேண்டுமா? வேண்டாமா? என பல கேள்விகளுக்கு ஜாம்பவான் கவாஸ்கர் தனது பேட்டியில் பதிலளித்துள்ளார்.
“விராத் கோலியை தவிர 2வது டெஸ்ட் போட்டியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் இருந்த வீரர்கள் தொடர்ந்து விளையாடினார்கள். கிட்டத்தட்ட இந்திய அணி எந்தவித மாற்றமும் செய்யத் தேவைப்படாத அணியாக இருக்கிறது. நன்றாக விளையாடி வருகிறார்கள். ஒரு சில வீரர்கள் அன்றைய நாளில் நன்றாக பர்பார்ம் பண்ண தவறிவிட்டாலும் ஒட்டுமொத்த அணியாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பி விட்டால், விஹாரியை மீண்டும் வெளியில் அமர்த்துவது சரியாக இருக்கும். மேலும், சிராஜ் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்த வில்லை. ஆகையால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது இஷாந்த் சர்மா இருவரில் ஒருவர் உள்ளே எடுத்து வரப்படுவது சரியான தேர்வாக இருக்கும். சிராஜ் நல்ல நிலையில் இருந்தால், அவரால் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் ஒரு இன்னிங்ஸில் வீச முடியும் என்றால், மீண்டும் அவரையே அணியில் வைத்துக்கொள்வதும் சரியான தேர்வுதான். கிட்டத்தட்ட இந்திய அணி மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. புஜாரா மற்றும் ரஹானே தனது பார்மை மீண்டும் தொடர வேண்டும். இந்திய அணிக்கு மிகவும் ஆரோக்கியமானதாக தெரிகிறது.” என்றார்.