இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவராக மறைந்த வி.பி.சந்திரசேகர் செயல்பட்டுள்ளார். அப்போது அவருக்கும் முன்னாள் கேப்டன் தோனிக்கும் இடையிலான ஒரு சுவாரஸ்ய சம்பவம் தற்போது நினைவுகூரப்பட்டு வருகிறது. அதில் தோனியுடனான தனது முதல் நினைவலையை சந்திரசேகர் பகிர்ந்திருந்தார்.
மகேந்திர சிங் தோனி தன்னை மிகவும் கோபப்படுத்தியதாக வி.பி.சந்திரசேகர் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பேட்டியில் வி.பி.சந்திரசேகர் கூறியதாவது,
இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்தபோது ஹைதராபாத்தில் தோனியை முதன்முறையாக சந்தித்தேன். பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருந்த தோனி, போட்டியின் முந்தைய நாள் இரவு வரை வரவில்லை. பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. தெரிந்தவர்களிடமும் விசாரித்து பலனில்லை.
இது எனக்கு அதிகப்படியான கோபத்தை ஏற்படுத்தியது. இரவு 11 மணியளவில் எனது விடுதி அறையின் கதவு தட்டப்பட்டது. உணவு பரிமாறுபவர் வந்திருப்பார் என நினைத்து கதவை திறந்தேன். அப்போது நீண்ட தலைமுடியுடன் ஒருவர் நின்றிருந்தார். நான் தோனியை முன்-பின் கண்டதில்லை, அவரது புகைப்படத்தையும் பார்த்ததில்லை என்பதால் யார் என்று விசாரித்தேன்.
அப்போது தனக்கே உரிய அமைதியுடன், நான் தான் மகேந்திர சிங் தோனி என்று சிறு புன்னகையுடன் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஆனால், கோபம் தீராத நான், தற்போது 11 மணியாகிவிட்டது. ஏன் இதுவரை வரவில்லை என்று கேள்வி எழுப்பினேன். ஆனால், நான் தான் வந்துவிட்டேனே என்று கூலாக என்னிடம் தெரிவித்தார். அன்று முதல் ஒவ்வொரு நாளும் அவர் தன்னை வளர்த்துக்கொண்டார். தோனி எனும் புதிய வரலாறு தொடங்கியது என்று தெரிவித்தார்.
இறுதி அஞ்சலிக்காக, வி.பி.சந்திரசேகர் உடல், சென்னை, விஸ்வேசபுரத்தில் உள்ள அவரது வீட்டில், வைக்கப்பட்டிருந்தது. உடலுக்கு, உறவினர்கள், நண்பர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீகாந்த், ராகுல் டிராவிட், சிவராமகிருஷ்ணன், சடகோபன் ரமேஷ், டபிள்யுவி.ராமன் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் முரளி விஜய், தினேஷ் கார்த்திக், விஜய்சங்கர் உள்ளிட்ட வீரர்கள், நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இது தவிர, சமூக வலைதளங்களிலும், பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
அவரது தாயார் மற்றும் சகோதரர், அமெரிக்காவில் இருந்து, இன்று அதிகாலை, சென்னை வரவுள்ளதால், காலை, 9:00 மணியளவில், இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, மயிலாப்பூர், கைலாசபுரத்தில் உள்ள மின் தகன மேடையில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.