அபினவ் சடரங்காணியை எடுக்க 3 அணிகள் போட்டிபோட, கடைசியில் 2.6 கோடி ரூபாய்க்கு குஜராத் அணி தட்டிச்சென்றது.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் துவங்குவதற்கு முன்பாக, மெகா ஏலம் இரண்டு நாட்கள் பெங்களூருவில் நடத்தப்படுகிறது. இதில் முதல் நாள் ஏலம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. பல வீரர்கள் பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்டார்கள்.
அதிகபட்சமாக இஷன் கிஷன் 15.25 கோடிக்கு மும்பை அணியால் எடுக்கப்பட்டார். முதல் நாள் முடிவில் இவர்தான் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்டவராக இருக்கிறார். இதற்கு அடுத்ததாக, 14 கோடிகள் கொடுத்து தீபக் சஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
இந்திய அணிக்கு இதுவரை ஆடாத பல இளம் வீரர்கள், குறைந்த பட்சம் 20 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கப்பட்டு பல கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்டனர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இவர்கள் மீது பல அணிகள் கவனம் செலுத்தி வந்திருக்கின்றனர்.
குறிப்பாக கர்நாடகாவைச் சேர்ந்த அபினவ் சடரங்காணி என்பவர் குஜராத் அணிக்கு 2.6 கோடிகள் கொடுத்து எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை எடுக்க பெங்களூரு, டெல்லி போன்ற அணிகள் போராடின. இறுதியில் குஜராத் அணி தட்டி சென்றது. கர்நாடகா அணிக்கு அறிமுகமாகி மூன்று மாதங்கள் கூட முழுமையாக முடிவடையாத நிலையில், இவரை எடுக்க பல அணிகள் போராடியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில் முதல் முறையாக கர்நாடக அணிக்கு இவர் அறிமுகமானார். காலிறுதி போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், 49 பந்துகளில் 70 ரன்கள் அடித்திருந்தார். இதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். இதே தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 164 ரன்கள் எடுத்திருந்தார். இவரது சராசரி 54 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 150க்கு மேல் வைத்திருக்கிறார்.
எளிதாக சிக்சர் அடிக்க கூடிய இவர், மிடில் ஆர்டரில் நான்கு அதிரடியாகவும் ஆடக் கூடியவர் என்பதால் இவரை எடுக்க பல அணிகள் போட்டி போட்டனர். இவரது அறிமுக விலை வெறும் 20 லட்சம் மட்டுமே இருந்தது. அதிலிருந்து 2.6 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டு இருப்பதால் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
கர்நாடகா பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் தொடர்ந்து விளையாடி வந்தாலும், கர்நாடகா அணிக்கு எடுக்கப்படாமல் இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு, 10 போட்டிகளுக்கும் குறைவாகவே ஆடியிருக்கும் இவரை பல அணிகள் தங்களது கவனத்தில் கொண்டு எடுக்க முயற்சித்திருப்பது இனி வரும் இளம் வீரர்களுக்கு கூடுதல் நம்பிக்கையாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.