இத கூட செய்யலேனா நீ எதுக்கு கேப்டனா இருக்கனும்..? ரிக்கி பாண்டிங் காட்டம் !!

அதிக முக்கியத்துவம் கொண்ட ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்து பொறுப்பற்ற வகையில் பேசிய ஜோ ரூட்டை முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நடத்தப்படும் அதிக முக்கியத்துவம் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி மிகப்பெரும் வெற்றியை சந்தித்தது. முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 275 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தோல்வியை தொடர்ந்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், இங்கிலாந்து அணியின் சீனியர் பந்துவீச்சாளர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பந்துவீசவில்லை, பந்துவீச்சாளர்கள் தங்களது பந்துவீச்சில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஜோ ரூட்டின் இந்த பேச்சு குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங், ஜோ ரூட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், “ஜோ ரூட்டின் பேச்சு எனக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தேவைக்கு ஏற்ப மாற்றம் செய்ய முடியாவிட்டால் எதற்காக ஜோ ரூட் கேப்டனாக இருக்க வேண்டும்..? பந்துவீச்சாளர்கள் கேப்டன் சொல்வதை தான் கேட்க வேண்டும். கேப்டனும் அணியின் தேவைக்கு ஏற்ப தங்களது பந்துவீச்சாளர்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஜோ ரூட் இது போன்று பொறுப்பற்ற வகையில் பேசுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.