அரையிறுதியில் தோனிக்கு முன்னர் பாண்டியா ஏன் இறங்கினார் என்ற கிரிக்கெட் வல்லுநர்கள் கேள்விக்கு தற்போது விளக்கமளித்துள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
உலகக்கோப்பை தொடரின் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 239 ரன்கள் அடித்தது. அடுத்து இலக்கை துரத்திய இந்திய அணி 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. 5 ஓவர்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில் நிலைத்து ஆட தினேஷ் கார்த்திக் இறக்கப்பட்டார். 24 ரன்கள் இருக்கையில் தினேஷ் கார்த்திக் அவுட் ஆக தோனி தான் இறங்குவார் என எதிர்பார்க்கபட்டது.
ஆனால், ஹார்டிக் பாண்டியா களமிறக்கப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடவே பாண்டியா சரி வருவார். தோனி இறங்கியிருந்தால் ரிஷப் பண்ட்டை நிலைத்து ஆட வைத்திருப்பார். வீணான ஷாட்களை அடிக்க வைத்திருக்கமாட்டார். தோனியை தான் முன்னர் இறக்கியிருக்க வேண்டும் என சச்சின், கங்குலி மற்றும் சேவாக் போன்றோர் தொடர்ந்து இந்திய நிர்வாகத்தின் மீதும் கேப்டன் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோர் மீதும் விமர்சனத்தை முன் வைத்தனர்.
இதற்க்கு தற்போது விளக்கமளித்துள்ள பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனியை முன்னால் இறக்கி அவர் ஆட்டமிழந்திருந்தால் சேசிங் அத்தோடு முடிவுக்கு வந்து 100 ரன்களை கூட எட்டியிருக்க முடியாது, இது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாததாக முடிந்திருக்கும்.
அவரது அனுபவம் 25 ஓவர்களுக்கு மேல் தேவை என்பதால்தான் 7வதாக இறக்கினோம். அவர் உலகின் தலை சிறந்த பினிஷர், ஆகவே அவரை சரியாக பயன்படுத்தவே முயற்சித்தேன். மொத்த அணியும் தோனியின் பொசிசன் குறித்து தெளிவாகவே இருந்தது.
ரிஷப் பண்ட் துவக்கத்தில் சற்று நிலைத்து ஆட முயற்சித்தார். ஆனால், அவரது இயல்பு அதுவல்ல. இப்போது தான் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஆட பயிற்சி எடுத்து வருகிறார். அவர் விரைவில் வளர்ச்சியடைவார், ஏற்கெனவே அவர் தன் தவறை உணர்ந்து விட்டார். ஜடேஜா மற்றும் தோனி இறுதிவரை போராடினர். அதுதான் நாங்கள் விரும்பியது. ரன் அவுட் என்பது எதிர்பாராதது. ஆட்டத்தின் போக்கை ஒரு சிறந்த பீல்ட்டிங் மாற்றிவிடும் என்பதற்கு இது உதாரணம் என்றார்.