இரட்டைச்சதம் அடித்தபோது ரித்திகா கண்ணீர் விட்டது ஏன்? – மனம் உருகி பேசிய ஹிட்மேன்!
2017ல் இலங்கைக்கு எதிராக இரட்டை சதம் அடித்தபோது மைதானத்தில் இருந்த ரித்திகா கண்ணீர் விட்டது இதனால்தான் என மனமுருகி பேசியுள்ளார் ரோகித் சர்மா.
2017 ஆம் ஆண்டு இந்தியா வந்த இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித்சர்மா 115 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து இருந்தார்.
50 ரன்களை கடந்தால், தனது அதிரடியை வெளிப்படுத்தும் ரோகித் சர்மா இந்த போட்டியில் மிகவும் மந்தமாக ஆடியதால் பெரிய ஸ்கோரை எட்டுவார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் வானவேடிக்கைகளை காட்டி அடுத்த 36 பந்துகளில் 100 ரன்களை குவித்தார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இலங்கை அணிக்கு எதிராக இவர் அடிக்கும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும்.
ரோகித் சர்மா மிகப்பெரிய ஸ்கோர் அடிக்கும் அனைத்து போட்டிகளிலும் அவரது மனைவி ரித்திகா கேலரியில் இருந்து மிகவும் உற்சாகப்படுத்தி கொண்டிருப்பார். ஆனால் அன்றைய போட்டியில் கண் கலங்கியவாறு காணப்பட்டார்.
இறுதியாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. போட்டி முடிந்த பிறகு மனைவியின் கண்ணீருக்கான காரணத்தை கேட்டறிந்த ரோகித் சர்மா.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, அதைப் பற்றி தற்போது மனமுருகி பேசியிருக்கிறார். ரோகித் சர்மா கூறியதாவது:
“உண்மையை சொன்னால், துவக்கத்தில் மந்தமாகவே ரன் சேர்த்தேன். மறுபக்கம் தவான், ஸ்ரேயஸ் ஐயர் விளாசினர். இரட்டை சதம் அடிப்பேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால், 125 ரன்களை கடந்தவுடன் எனக்குள் நம்பிக்கை பிறந்தது. எதிரணியின் பவுலர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. நானாக தவறு செய்தால் மட்டுமே அவுட்டாக நேரிடும் என்பதை புரிந்து செயல்பட்டேன். கடைசி கட்டத்தில் மின்னல் வேகத்தில் ரன் சேர்த்து, மூன்றாவது இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்தேன்.
அந்த தருணத்தில் கேலரியில் இருந்த எனது மனைவி ரித்திகா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். போட்டி முடிந்த பின், காரணத்தை கேட்டேன். 197வது ரன்னை எடுக்க ஓடிய போது டைவ் அடித்தேன். அப்போது எனது கையில் காயம் ஏற்பட்டிருக்குமோ? என நினைத்து அழுதுள்ளார். அன்று எங்களது திருமண நாள் என்பதால், ஸ்பெஷல் இன்னிங்சாக மாறியது. ரித்திகாவுக்கு எனது சிறந்த திருமண பரிசாகவும் அமைந்தது.” என்றார்.