கடைசி நேரத்தில் கதகளி ஆடிய பூரன் மற்றும் ஹோல்டர்: ஆப்கன் அணிக்கு கடினமான இலக்கு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

மேற்கிந்தியத் தீவுகளின் தொடக்க ஆட்டக்காரர் கெயில் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, எவின் லீவிஸ் மற்றும் ஷை ஹோப் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணை நிதானமாக விளையாடினாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், இருவரும் அரைசதம் அடித்தனர்.

அரைசதம் அடித்த லீவிஸ் 58 ரன்களுக்கு ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹெத்மயர் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கத்தில் துரிதமாக விளையாடினார். 31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த அவர் தவ்லாத் ஸத்ரான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹோப் 77 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

குறுகிய நேரத்தில் இரண்டு விக்கெட்டுகள் என்பதால், அந்த அணி சற்று சறுக்கலை சந்தித்தது. ஆனால், நிகோலஸ் பூரன் மற்றும் கேப்டன் ஹோல்டர் பாட்னர்ஷிப் அமைத்தது மட்டுமில்லாமல் துரிதமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர். இதனால், அந்த அணியின் ரன் ரேட் கணிசமாக உயர்ந்தது.

கடந்த ஆட்டத்தில் சதம் அடித்த பூரன் இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். இந்த துரிதமாக ரன் சேர்த்து வந்த நிலையில், கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பூரன் 58 மற்றும் ஹோல்டர் 45 ரன்கள் எடுத்தனர்.

கடைசி ஓவரில் களமிறங்கினாலும், பிராத்வைட் தான் எதிர்கொண்ட 4 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரி அடித்து அணிக்கு அதிரடியான ஃபினிஷிங்கை தந்தார். இதன்மூலம், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் சார்பில் ஸத்ரான் 2 விக்கெட்டுகளையும், ஷிர்ஸாத், நபி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

Sathish Kumar:

This website uses cookies.