விண்டீஸ் அணியுடனான முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தீபக் ஹூடாவிற்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி வெஸ்ட் இண்டீஸின் பிரையன் லாரா மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரண் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் அர்ஸ்தீப் சிங், அஸ்வின் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அர்ஸ்தீப் சிங் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைத்திருந்தாலும், சமீபத்தில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் ஹூடாவிற்கு இடம் கொடுக்கப்படவில்லை. காரணமே இல்லாமல் தீபக் ஹூடா அணியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தீபக் ஹூடாவிற்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவை விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீகாந்தும் இந்திய அணியின் இந்த முடிவை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீகாந்த் பேசுகையில், “டி.20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் தனது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்த தீபக் ஹூடாவை எதற்கு அணியில் எடுக்கவில்லை..? தீபக் ஹூடா போன்ற வீரர் ஒரு அணிக்கு நிச்சயம் தேவை. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தீபக் ஹூடாவை காரணமே இல்லாமல் அணியில் இருந்து நீக்கியுள்ளது ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல” என்று தெரிவித்தார்.