கரோனா வைரஸ் பாதிப்பினால் ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் ஆடினால் விராட் கோலி போன்றவர்கள் எப்படி செயலாற்றுவார்கள் என்று ஆஸ்திரேலிய ஆஃப் ஸ்பின்னர் நேதன் லயனும், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் ருசிகர விவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவின் வலுவான் அணியுடன் இந்திய அணி 4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவில் ஆடுகிறது. இந்தத் தொடரும் ஸ்டேடியத்தில் ஆட்களே இல்லாமல் நடந்தால் என்ன ஆகும்?
குறிப்பாக விராட் கோலி ஸ்டேடியத்தில் உள்ள ரசிகர்களுக்காகவும் தொலைக்காட்சி ரசிகர்களுக்காகவும் செய்யும் மைதான சேஷ்டைகள் என்ன ஆகும் என்ற ரீதியில் நேதன் லயனும், மிட்செல் ஸ்டார்க்கும் யோசித்துள்ளனர்.
லயன் கூறும்போது, “கோலி எந்த ஒரு சூழலுக்கும் தன்னை திறம்பட தகவமைத்துக் கொள்வார். ஆனால் நான் இது பற்றி அன்று ஸ்டார்க்குடன் பேசினேன். ஸ்டேடியத்தில் ஆளே இல்லாமல் ஆடுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அதுவும் விராட் கோலி காலியான இருக்கைகளை நோக்கி என்ன சைகை செய்வார் என்று யோசித்துப் பார்த்தேன்.
இது நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். ஆனால் விராட் சூப்பர் ஸ்டார். நாம் எந்தச் சூழ்நிலையில் ஆடுகிறோமோ அதற்கு ஏற்ப கோலி தன்னை தகவமைத்துக் கொள்வார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை உற்சாகத்துடன் எதிர்நோக்குகிறேன். ஆஷஸ் போல் இதுவும் ஒரு பெரிய டெஸ்ட் தொடர். இந்தியா கிரிக்கெட் உலகின் பவர் ஹவுஸ். அவர்கள் இங்கு வந்து ஆடப்போவது மிக அருமையாக இருக்கும்.
ரசிகர்களுடனா அல்லது காலி மைதானமா என்பது பற்றி நான் கவலைப்படவில்லை, மாறாக இந்தியாவுடன் ஆடுவதே ஒரு பெரிய உற்சாகம். அவர்களுடன் மீண்டும் ஆடும் வாய்ப்பு பற்றியே யோசிக்கிறேன்.
கடந்த முறை அவர்கள் எங்களை இங்கு வீழ்த்தி விட்டனர். ஆனால் இந்த முறை வலுவான ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்த முறை நம்ப முடியாத அளவுக்கு நான் இந்தியாவுடன் ஆடுவதில் உற்சாகமாக இருக்கிறேன்” என்றார் நேதன் லயன்.