“பார்மில் இருக்கிறார்களோ? இல்லையோ? விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மூன்றுவித போட்டிகளிலும் விளையாட வேண்டும். அவர்கள் இல்லாமல் ஐசிசி போட்டிகளுக்கு சென்றால் இந்திய அணிக்கு தான் இது பிரச்சனை.” என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து டி20 போட்டிகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் எடுக்கவில்லை. அடுத்ததாக வரவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கும் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் எடுக்கப்படவில்லை.
இவர்கள் இருவரும் புறக்கணிக்கப்பட்டு வருவதற்கு பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விராட் கோலி ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவரை எதற்காக டி20 போட்டிகளில் எடுக்கவில்லை என்கிற குரல்களும் வலுக்கின்றன.
இந்த விஷயத்திற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் பேசியதாவது:
“என்ன நடந்தாலும் சரி, ஐசிசி தொடர்களில் விராட் கோலி ரோகித் சர்மா இல்லாமல் முழுமை அடையாது. இவர்கள் இருவரும் இந்திய அணியில் இருக்கிறார்கள் என்றாலே எதிரணி சற்று அழுத்தத்தில் இருக்கும். இவர்களை அணிக்குள் எடுக்காமல் ஓரம் கட்டுவது இந்திய அணிக்கு தான் சிக்கலை ஏற்படும். விராட் கோலி இப்போதும் தனது கிரிக்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். பல இளம் வீரர்களுக்கு முன் உதாரணமாகவும் இருக்கிறார். உடல் தகுதியில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.
ரோகித் சர்மா ஒற்றை ஆளாக நின்று போட்டிகளை வெற்றி பெற்று கொடுக்க கூடியவர். அவரது பார்ம் தற்காலிகமாக சரியில்லை என்றாலும், அவரைப் போன்ற வீரர் அணியில் தொடர்ந்து பயணித்தால் எந்த நேரமும் மீண்டும் தனது பார்மிற்கு வந்து விடுவார்கள்.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தலைசிறந்த இரண்டு வீரர்களை அணியில் வைத்துக்கொண்டு அவர்களை எந்தவித போட்டியிலும் விளையாட வைக்கலாம். டி20 போட்டிகளில் ஓரம் கட்டுவது நியாயமற்றது. ஐசிசி தொடர்களில் இவர்களை விட வேறு யார் அழுத்தங்களை நன்றாக கையாள்வார்கள். இந்திய அணி நிர்வாகம் இந்த வகையில் தவறு செய்து வருகிறது என்று கருதுகிறேன்.” என்றார் கம்ரான் அக்மல்.