இந்திய அணியில் பும்ராவிற்கு நிகர் யாரும் இல்லை என கருத்து தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
இந்திய அணியின் முன்னணி நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் தீவிரம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகி இருக்கிறார். இது குறித்து இந்திய அணியின் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையின்படி, பும்ராவிற்கு முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் சற்று தீவிரமாக இருக்கிறது. அவருக்கு மருத்துவக் குழுவினரால் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவரால் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட முடியாது. அவருக்கு மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
பும்ராவிற்கு மாற்று வீரர் யார்? ரிசர்வ் வரிசையில் இருக்கும் முகமது சமி மற்றும் தீபக் சகர் இருவரில் யார் உள்ளே எடுத்து வரப்படலாம்? அல்லது பும்ராவிற்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் உள்ளே எடுக்கப்பட்டிருக்கும் முகமது சிராஜ் உலகக் கோப்பை தொடரிலும் எடுக்கப்படுவாரா? என்கிற பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது குறித்த தெளிவான விளக்கத்தை இந்திய அணியின் லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்திருக்கிறார். “இந்திய அணியில் பும்ரா இடம்பெறாதது குறிப்பிடத்தக்க பின்னடைவை நிச்சயம் தரும். அவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறி விடலாம். வேறு எந்த வீரராலும் அவருக்கு இணையாக பங்களிப்பை கொடுத்து, அந்த இடத்தை நிரப்புவது சந்தேகம் தான்.” என்றார்.
காயத்திலிருந்து குணமடைந்து வந்த பிறகு இரண்டு போட்டிகளில் விளையாடிய பும்ரா எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை நாம் கண்டோம். நிச்சயம் டி20 உலக கோப்பையில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை கொடுக்கும். ஆனாலும் பும்ரா இல்லாத திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில், தீபக் சகர் மற்றும் அர்ஷதிப் சிங் இருவரும் செயல்பட்ட விதம் பெருத்த நம்பிக்கையை தந்திருக்கிறது. கிட்டத்தட்ட பும்ராவின் இடத்தை நிரப்புவதற்கு சரியாகவும் இருந்தது.” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஜடேஜா இல்லாத போது அவருடைய இடத்தை நிரப்புவதற்கு உள்ளே வந்த அக்சர் பட்டேல் அபாரமாக பந்துவீசி பெருத்த நம்பிக்கையை கொடுத்து இருக்கிறார். ரன்களையும் விக்கெட்டுகளையும் கைப்பற்றி வருகிறார்.” என்ற கருத்துக்களையும் முன் வைத்தார்.