சுரேஷ் ரெய்னா இல்லாமல் சென்னை அணி எப்படி இருக்கும் என வருத்ததுடன் தெரிவித்து இருக்கிறார் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ்.
இந்த வருடம் ஐபிஎல் தொடர் மீண்டும் துவங்க இருக்கிறது என்று செய்திகள் வந்த தருணத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து சலசலப்புகள் நிலவி வருகின்றன. முதலாவதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு 5 நாட்கள் துபாய் செல்வதற்கு முன்பாக பயிற்சி முகாம் வைக்கப்பட்டபோது சில சலசலப்புகள் ஏற்பட்டது.
அதன் பிறகு சென்னை அணியை சேர்ந்த இந்திய வீரர்கள் பலர் துபாய் சென்ற போது முறையான சமூக இடைவெளி பின்பற்றாததால் இரண்டு வீரர்கள் உட்பட பதிமூன்று பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதற்கு தோனி மற்றும் ரெய்னா இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தான் காரணம் எனவும் கூறப்பட்டது.
அடுத்ததாக நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் ஐபிஎல்தொடரில் இருந்து விலகினார். இப்படி தொடர்ந்து பல சலசலப்புகள் சென்னை அணியில் நிலவியது. இந்நிலையில் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா இல்லாததால் எந்த அளவிற்கு பலவீனமாக இருக்கும் என முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். டீன் ஜோன்ஸ் கூறுகையில்,
“சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் வலது கை பேட்ஸ்மேன்களாக இருக்கின்றனர். இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாததால், சுழல் பந்துவீச்சாளர்களை குறிப்பாக லெக் ஸ்பின்னர்களை எதிர் கொள்வது மிகவும் சிரமம் ஏற்படும்.
இடது கை பேட்ஸ்மேன்கள் லெக் ஸ்பின்னர்களை நன்கு விளையாடுவர். சென்னை அணிக்கு இது பின்னடைவை தரலாம். முக்கிய போட்டிகளில் கூட தோல்வி பெறும் நிலைக்கு செல்லலாம். சுரேஷ் ரெய்னா போன்ற அதிக ரன் குவித்து வரும் பேட்ஸ்மேன் அணிக்கு இல்லாதது பேட்டிங் வரிசையில் சற்று பின்னடைவை கொடுக்கும்.” என்றார்.